சாலையை விட உயரமாக இருக்கும் பாதாளச்சாக்கடை தொட்டிகளால் காரைக்குடியில் தொடரும் விபத்து

காரைக்குடி : காரைக்குடி செக்காலை சாலையில் சாலையை விட பாதாளச்சாக்கடை தொட்டிகளின் மேல் பகுதி உயராக இருப்பதால் வாகனத்தில் செல்வோர் தடுமாறி விழுவது தொடர்கதையாகி வருகிறது.காரைக்குடி நகராட்சிக்கு உட்பட்ட 36 வார்டுகளில் பாதாளச்சாக்கடை அமைக்கும் திட்டம் ஆமை வேகத்தில் நடந்து வருகிறது.  இப்பணிக்கு என ரூ.112 கோடிக்கு மேல் நிதி ஒதுக்கப்பட்டு பணிகள்  நடக்கிறது. பாதாளச்சாக்கடை திட்டத்தால் பல்வேறு பகுதிகளுக்கு செல்லவே முடியாமல் தனித்தீவுகளாக மாறியுள்ளன. தவிர முக்கிய சாலைகள் அனைத்தும்  படுகுழியாக உள்ளதால் மக்கள் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது.

இதில் மக்கள் அதிகமாக பயன்படுத்தும் செக்காலை சாலை உள்பட பல்வேறு முக்கியசாலைகள் அமைக்கப்படாததை கண்டித்து திமுக இலக்கிய அணி தலைவர் மு.தென்னவன் தலைமையில் சாலையில் உருளும் போராட்டத்தை திமுகவினர் நடத்தினர். இதனை தொடர்ந்து காங்கிரஸ் எம்எல்ஏ ராமசாமி  சாலை அமைக்க மறியல் போராட்டம் நடத்தினார்.

அதன்பின்னர் செக்காலை ரோட்டில் பாதாளச்சாக்கடை திட்டத்துக்கு வெட்டப்பட்ட பகுதிகளில் மட்டும் நெடுஞ்சாலை துறை சார்பில் புதிய சாலை அமைக்காமல் பேட்ஜ் ஒர்க் மட்டும் பார்க்கப்பட்டது. இதில் சாலைகளை விட பாதாளச்சாக்கடை தொட்டிகளில் மேல் பகுதி பல்வேறு இடங்களில் உயரமாக உள்ளது.

இதனால் வாகன ஓட்டிகள் தடுமாறி விழுந்து காயமடையும் நிலை உள்ளது. இதுகுறித்து புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காத நிலையே உள்ளது என சமூக ஆர்வலர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

சமூகஆர்வலர் பொறியாளர் இம்ரான் கூறுகையில், சாலை அமைத்தும் பயனற்ற நிலையே உள்ளது.  பாதாளச்சாக்கடை மூடிகள் மட்டுமே வெளியே தெரியும். ஆனால் செக்காலை சாலையில் ஆள்நுழைவு தொட்டிகளின் மேல் பாகம் சாலையை விட உயரமாக உள்ளது. இதனால் வாகனங்களில் செல்லும் உயரமாக இருக்கும் மேல்பாக பகுதியில் மோதி பலர் கீழே விழுந்து காயமடைவது வாடிக்கையாகி வருகிறது. அவசரகதியில் சாலையை அமைத்து தங்களது கடமையை முடித்துள்ளனர். இதனை சரிசெய்யாவிட்டால் மீண்டும் மக்களை திரட்டி போராட்டம் நடத்தப்படும் என்று கூறினார்.

Related Stories: