28 ஆண்டுகளுக்கு பிறகு கீழக்கரை கலங்கரை விளக்கம் பொதுமக்கள் பார்வைக்கு திறப்பு

கீழக்கரை : கப்பல் போக்குவரத்து அமைச்சக துறையின் கீழ் செயல்பட்டு வரும் சென்னை மண்டலத்தின் 21 கலங்கரை விளக்கங்களில் கீழக்கரை கலங்கரை விளக்கம் ஒன்று. கடந்த  1979ம் ஆண்டு முதல் இது செயல்பட தொடங்கியது. 35 மீட்டர் உயரமும் 15 நொடிக்கு ஒரு முறை வெளிச்சத்தை உமிழும் சக்தி வாய்ந்த விளக்கையும் கொண்டது. பல ஆண்டு காலம் முன்பு கீழக்கரை கலங்கரை விளக்கத்தை காண்பதற்கு கட்டணம் பெற்று கொண்டு அனுமதித்து வந்தார்கள். பின்னர் 1991ம் ஆண்டு முதல் பார்வையாளர்களுக்கு அனுமதிக்கப்படவில்லை.

இந்நிலையில் இப்பகுதி பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு கலங்கரை விளக்கத்தை காண்பதற்கு அனுமதிக்க வேண்டும் என்ற நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வந்தனர். இந்த நிலையில் கீழக்கரை கலங்கரை விளக்கம் பொதுமக்கள் பார்வையிட அரசு துறையின் உரிய ஒப்புதல் அளிக்கப்பட்டு நேற்று முதல் பொதுமக்கள் பார்வைக்கு அனுமதிக்கப்பட்டனர்.  

முதல் நாளான நேற்று ஏராளமான பொதுமக்கள் வருகை தந்தனர்.அவர்களுக்கு கொரோனா முன்னெச்சரிக்கை விதிகள் எடுத்துரைக்கப்பட்டு இதன் பின்னரே அனுமதிக்கப்பட்டனர். தொடக்க நிகழ்ச்சியில் கீழக்கரை கலங்கரை விளக்க அதிகாரிகள் வசந்த் மற்றும் பலர் பங்கேற்றனர். இதன் மூலம் சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை இப்பகுதியில் அதிகரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: