திருவாரூர் மாவட்டத்தில் 2வது நாளாக குறைந்த அளவில் அரசு பஸ்கள் இயக்கம்-பயணிகள் கடும் அவதி

திருவாரூர் : திருவாரூர் மாவட்டத்தில் 2வது நாளாக நேற்றும் குறைந்த அளவிலான பஸ்கள் இயங்கியதால் பயணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.

14வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையினை உடனடியாக துவங்கிட வேண்டும். ஓய்வு பெற்றவர்களுக்கான பணப்பலன்களை வழங்கிட வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்கள் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்திய பின்னரும் கோரிக்கைகள் நிறைவேறாத காரணத்தினால் நேற்று முன்தினம் முதல் தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்தை அறிவித்துள்ளனர்.

இதனையொட்டி மாநிலம் முழுவதும் 80 சதவிகிதத்திற்கும் மேற்பட்ட அரசு பஸ்கள் இயங்கவில்லை. அதன்படி திருவாரூர் மாவட்டத்தில் திருவாரூர், திருத்துறைப்பூண்டி, மன்னார்குடி மற்றும் நன்னிலம் ஆகிய 4 அரசு போக்குவரத்து கழக பணிமனைகளில் மொத்தம் 217 பஸ்கள் இருந்துவரும் நிலையில் இந்த வேலை நிறுத்தம் காரணமாக நேற்றும் முன்தினம் 20 சதவீத பஸ்கள் மட்டுமே இயங்கின.

இந்நிலையில் நேற்றும் 2வது நாளாக இந்த போராட்டம் தொடர்ந்து நடைபெற்றது. இதில் முதல் நாள் போன்றே 20 சதவீத பஸ்கள் மட்டுமே இயக்கப்பட்டன. இதில் நன்னிலம் பணிமனையில் 7 பஸ்கள், திருவாரூரில் 13, மன்னார்குடியில் 11, திருத்துறைப்பூண்டியில் 10 என மொத்தம் 41 பஸ்கள் இயக்கப்பட்டது. இதில் 12 பஸ்கள் தற்காலிக ஊழியர்களை கொண்டு இயக்கப் பட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த வேலைநிறுத்தம் காரணமாக நேற்றும் பஸ் நிலையங்களில் பஸ்சிற்காக பொதுமக்கள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இதன் காரணமாக தனியார் பஸ்களில் அளவுக்கு அதிகமான கூட்டம் காணப்பட்டது. மேலும் கடந்தாண்டு மார்ச் மாதம் கொரோனா காரணமாக நிறுத்தப்பட்ட ரயில் சேவை தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங்களில் இதுவரையில் பாசஞ்சர் ரயில் இயக்கப்படாததால் திருவாரூர் மாவட்டத்தில் இருந்து அண்டை மாவட்டங்களான தஞ்சை மற்றும் நாகை மாவட்டங்களுக்கு சென்று வரவேண்டிய அரசு ஊழியர்கள், கல்லூரி மாணவ மாணவிகள் என பலரும் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.

மேலும் கோரிக்கைகளை வலியுறுத்தி திருவாரூரில் பணிமனை முன்பாக தொமுச தொழிற்சங்க முன்னாள் மண்டல துணை பொதுச்செயலாளர் கலியபெருமாள் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் தொழிற்சங்க பொறுப்பாளர்கள் மோகன், மணிகண்டன் சேகர், ரவிச்சந்திரன், செந்தில்குமார், தங்கமணி, மதியழகன் உட்பட பலர் கலந்து கொண்டனர். இதேபோல் நன்னிலம் பணிமனை முன்பாகவும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Related Stories: