அமைந்தகரையில் பட்டப்பகலில் பயங்கரம்: வீடு புகுந்து தாய் வெட்டிக்கொலை: மகளுக்கு சரமாரி அரிவாள் வெட்டு

அண்ணாநகர்: அமைந்தகரை வெள்ளாளர் தெருவை சேர்ந்தவர் கமலக்கண்ணன், கார் டிரைவர். இவரது மனைவி ஜெயந்தி (44). இவர்களது மகள் மோனிகா (23), கல்லூரி படிப்பை முடித்து, சாப்ட்வேர் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். நேற்று காலை கமலக்கண்ணன் வழக்கம்போல் வேலைக்கு சென்றார். ஜெயந்தி, மோனிகா ஆகியோர் வீட்டின் மாடியில் உள்ள அறையில்  இருந்தனர். சுமார் 11.30 மணிக்கு மர்ம நபர்கள் 2 பேர், அந்த அறைக்குள் நுழைந்து தாய், மகள் இருவரையும் சரமாரியாக அரிவாளால் வெட்டினர். இதில், பலத்த காயமடைந்த ஜெயந்தி ரத்த வெள்ளத்தில் சரிந்தார். மோனிகா பலத்த காயங்களுடன் அலறி துடித்தார். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். இதை பார்த்து மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பினர். அவர்களை பொதுமக்கள் விரட்டி பிடிக்க முயன்றபோது, இருவரும் அரிவாளை காட்டி மிரட்டியபடி அங்கிருந்து தப்பினர்.

இதையடுத்து, மாடிக்கு சென்று பார்த்தபோது, ஜெயந்தி, மோனிகா இருவரும் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடியது தெரிந்தது. இதுபற்றி அமைந்தகரை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார்,  படுகாயமடைந்த இருவரையும் மீட்டு, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு ஜெயந்தி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். மோனிகா தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். முதற்கட்டமாக, அங்குள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை போலீசார் ஆய்வு செய்ததில், 2 வாலிபர்கள் அரிவாளுடன் ஓடுவதும், அந்த வழியாக வந்த ஆட்டோவை அரிவாளை காட்டி மறித்து, அதில் ஏறி தப்பி செல்வதும் தெரிந்தது. இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து, காதல் பிரச்னையா அல்லது முன்பகை காரணமா என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories:

>