ஓமலூர் அருகே பூங்கா கட்டுமான பணிகள் 3 ஆண்டுகளாக நிறுத்தம்-விரைந்து முடிக்க கோரிக்கை

ஓமலூர் : ஓமலூர் அருகே 30 லட்ச ரூபாய் மதிப்பில் அதிநவீன வசதிகளுடன் பூங்கா கட்டும் பணிகள் 3 ஆண்டுகளாக நிறுத்தப்பட்டு உள்ளது.

ஓமலூர் அருகே, பச்சனம்பட்டி கிராமம் மோட்டூரில், 50 சென்ட் பரப்பளவில் பூங்கா அமைக்க கடந்த 2017ம் ஆண்டு ஜூலையில், வெற்றிவேல் எம்எல்ஏ பூமி பூஜை செய்து, பணிகளை துவக்கி வைத்தார்.

பூங்காவில் உள்விளையாட்டு அரங்கம், அதிநவீன மின்னணு உடற்பயிற்சி மையம், நடைபயிற்சி தளம், குழந்தைகள் விளையாட்டு பூங்கா, கழிவறை, தண்ணீர் வசதிகளுடன் அமைக்க 30 லட்ச ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால், இந்த பகுதியில் பூங்கா அமைக்கப்படும் இடம் தங்களுக்கு சொந்தமானது என்றுஒரு தரப்பினர் கூறி வந்தனர். அவற்றை பொருட்படுத்தாமல் அந்த இடத்தில் பூங்கா அமைக்கும் பணிகள் துவங்கப்பட்டு கட்டுமான பணிகள் நடைபெற்றது.

இந்நிலையில், கடந்த 3 ஆண்டுகளாக பணிகள் நிறுத்தப்பட்டுள்ளது. மேலும், சுவர்கள் தரமற்ற முறையில் கட்டப்பட்டுள்ளதால் பெயர்ந்து விழுந்து வருகிறது. மேலும், பூங்கா கட்டுமான இடத்தில் முட்செடிகள் முளைத்து, மக்கள் நடமாட முடியாத நிலையில் உள்ளது. இது குறித்து அதிகாரிகள் மற்றும் பூங்கா கட்டுமான ஒப்பந்ததாரரிடம் கேட்டபோது, இங்கே பூங்கா கட்டுமான பணிகளுக்கு தனிநபர் ஒருவர் நீதிமன்றத்தில் தடையாணை பெற்றுள்ளதால் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளது. தடையாணையை ரத்து செய்து, இங்கே பூங்கா கட்டுவதற்கான ஒப்புதல் பெற்றதும் பணிகள் துவங்கப்படும்,’ என்றார்.

Related Stories:

>