சாலை பணியை விரைந்து முடிக்கக்கோரி போராட்டம்-போக்குவரத்து துண்டிப்பால் அவதி

தர்மபுரி : தர்மபுரி நகராட்சி 10வது வார்டில், கிடப்பில் போட்ட சாலை பணியை விரைவுபடுத்தக்கோரி, பொதுமக்கள் நேற்று போராட்டம் நடத்தினர்.

தர்மபுரி நகராட்சி 10வது வார்டில் ஏஎஸ்டிசி நகர், ஆவின் நகர், நந்திநகர், எம்ஜிஆர் நகர், அண்ணாநகர் உள்ளது. ஏஎஸ்டிசி நகரின் வழியாக செல்லும் பிரதான சாலையை 100க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

இந்த சாலை குண்டும், குழியுமாக மாறியதால், புதிய சாலை அமைக்க, டெண்டர் விடப்பட்டது. ஆனால், டெண்டர் விட்டு ஓராண்டாகியும், புதிய சாலை அமைக்கவில்லை. பொதுமக்கள் போராட்டத்தை தொடர்ந்து, கடந்த ஒருவாரத்திற்கு முன், ஏஎஸ்டிசி நகர் பிரதான சாலையின் குறுக்கே, கழிவுநீர் கால்வாய் செல்லும் தரைப்பாலம் உடைக்கப்பட்டது. ஆனால், அந்த பணி பாதியில் கிடைப்பில் போடப்பட்டது. இதனால், இந்த சாலையில் ஒருவாரமாக போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. சாலையை உடனே அமைக்க வலியுறுத்தி, நேற்று அப்பகுதி மக்கள் போராட்டம் நடத்தினர். ஆனால், அதிகாரிகள் யாரும் அங்கு வராததால், கலைந்து சென்றனர்.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ‘ஒப்பந்ததாரர் பணியை உடனே தொடங்க வேண்டும். இல்லையென்றால் பணியை ரத்து செய்து, வேறு ஒப்பந்ததாரருக்கு வழங்கி, பணிகளை முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும். இல்லையென்றால் 1000 பேர் திரண்டு, நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபடுவோம்,’ என்றனர்.

Related Stories: