3வது டெஸ்ட் போட்டி: அக்சர், அஷ்வின் சுழலில் மூழ்கியது இங்கிலாந்து: இந்தியா நிதான ஆட்டம்

அகமதாபாத்: இந்திய அணியுடனான 3வது டெஸ்ட் போட்டியில், அக்சர் படேல் - அஷ்வின் சுழல் கூட்டணியின் தாக்குதலை சமாளிக்க முடியாமல் திணறிய இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 112 ரன்னுக்கு சுருண்டது. நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நேற்று தொடங்கிய இப்போட்டியில், டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் முதலில் பேட் செய்ய முடிவு செய்தார். அந்த அணியில் 4 மாற்றங்கள் செய்யப்பட்டன. பர்ன்ஸ், லாரன்ஸ், ஸ்டோன், மொயீனுக்கு பதிலாக ஆண்டர்சன், ஆர்ச்சர், பேர்ஸ்டோ, கிராவ்லி இடம் பெற்றனர். இந்திய அணியில் முகமது சிராஜ், குல்தீப் யாதவுக்கு பதிலாக வாஷிங்டன் சுந்தர், ஜஸ்பிரித் பும்ரா சேர்க்கப்பட்டனர். கிராவ்லி, சிப்லி இருவரும் இங்கிலாந்து இன்னிங்சை தொடங்கினர். சிப்லி ரன் ஏதும் எடுக்காமல், இஷாந்த் வேகத்தில் ரோகித் வசம் பிடிபட... ரசிகர்களின் ஆரவாரத்தில் ஸ்டேடியம் குலுங்கியது. தனது 100வது டெஸ்டில் விக்கெட் வீழ்த்திய இஷாந்த் மகிழ்ச்சியில் ஆர்ப்பரித்தார்.

அவருக்கு சக வீரர்கள் வாழ்த்து தெரிவித்தனர். அடுத்து வந்த பேர்ஸ்டோவும் டக் அவுட்டாகி பெவிலியன் திரும்ப, இங்கிலாந்து அணிக்கு அதிர்ச்சி தொடக்கமாக அமைந்தது.எனினும், கிராவ்லி - கேப்டன் ரூட் இணைந்து 3வது விக்கெட்டுக்கு 47 ரன் சேர்த்து நம்பிக்கை அளித்தனர். ரூட் 17 ரன் எடுத்து அஷ்வின் சுழலில் பலியானார். பொறுப்புடன் விளையாடி அரை சதம் அடித்த கிராவ்லி 53 ரன் எடுத்து (84 பந்து, 10 பவுண்டரி) அக்சர் பந்துவீச்சில் எல்பிடபுள்யு ஆனார். ஓல்லி போப் 1 ரன், பென் ஸ்டோக்ஸ் 6 ரன்னில் பெவிலியன் திரும்பினர். ஆர்ச்சர் 11 ரன் எடுக்க, லீச் மற்றும் பிராடு தலா 3 ரன் எடுத்து விக்கெட்டை பறிகொடுத்தனர். பென் போக்ஸ் 12 ரன் எடுத்து அக்சர் சுழலில் கிளீன் போல்டாக, இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில்112 ரன்னுக்கு ஆல் அவுட்டானது ( 48.4 ஓவர்).

அந்த அணி 38 ரன்னுக்கு கடைசி 8 விக்கெட்டை பறிகொடுத்தது குறிப்பிடத்தக்கது. இந்திய பந்துவீச்சில் அக்சர் படேல் 21.4 ஓவரில் 6 மெய்டன் உள்பட 38 ரன் விட்டுக்கொடுத்து அரை டஜன் விக்கெட்டை வீழ்த்தினார். அஷ்வின் 3, இஷாந்த் 1 விக்கெட் எடுத்தனர். இதைத் தொடர்ந்து, முதல் இன்னிங்சை தொடங்கி விளையாடிய இந்திய அணி 22 ஓவர் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 67 ரன் எடுத்திருந்தது. கில் 11 ரன்னில் வெளியேற, புஜாரா டக் அவுட்டாகி ஏமாற்றமளித்தார். ரோகித் 41, கேப்டன் கோஹ்லி 13 ரன்னுடன் களத்தில் இருந்தனர்.

இஷாந்துக்கு நினைவுப் பரிசு

அகமதாபாத்தில் நேற்று தொடங்கிய 3வது டெஸ்ட் போட்டி, இந்திய வேகம் இஷாந்த் ஷர்மாவுக்கு 100வது டெஸ்ட் போட்டியாகும். இந்திய வீரர்களில் 100வது டெஸ்ட் போட்டியில் விளையாடும் 11வது வீரர் மற்றும் கபில்தேவுக்குப் பிறகு இந்த சாதனையை நிகழ்த்தும் 2வது இந்திய வேகப் பந்துவீச்சாளர் என்ற பெருமையை பெற்றுள்ளார் இஷாந்த்.  மேலும் 300 விக்கெட்டுக்கு மேல் வீழ்த்திய இந்திய வீரர்களில் 6வது வீரராகவும், 3வது வேகப் பந்துவீச்சாளராகவும் சாதனைப்  பட்டியலில் உள்ளார்.இந்நிலையில் நேற்று போட்டி தொடங்குவதற்கு முன்பு இஷாந்த்தை கவுரவிக்கும் வகையில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் சிறப்பு பரிசு வழங்கினார். கூடவே மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, இஷாந்தின் டெஸ்ட் தொப்பி உள்ள கண்ணாடி பேழையை அளித்தார். இந்த நிகழ்ச்சியில் மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு, பிசிசிஐ நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Related Stories:

>