வேளாண் சட்டங்கள் அமலுக்கு வந்தால் பெருமுதலாளிகளே விலையை தீர்மானிப்பர்: வயநாட்டில் ராகுல்காந்தி குற்றச்சாட்டு

திருவனந்தபுரம்: ‘வேளாண் சட்டங்கள் அமலுக்கு வந்தால் பெரும் முதலாளிகள் தீர்மானிக்கும் மலிவான விலைக்கு விவசாய பொருட்களை  விற்கவேண்டிய பரிதாப நிலை ஏற்படும்’ என்று வயநாட்டில் ராகுல்காந்தி பேசினார். காங்கிரஸ்  முன்னாள் தலைவரும், வயநாடு எம்பியுமான ராகுல்காந்தி,  நேற்று முன்தினம் மாலை கேரள மாநிலம் வயநாடு வருகை தந்தார். நேற்று  காலை வயநாடு மாவட்டம் பூதாடி பகுதியில் நடந்த குடும்ப  நிகழ்ச்சியில்  கலந்து கொண்ட  ராகுல்காந்தி, மேப்பாடி அரசு பள்ளியில் காந்தி சிலையையும்  திறந்து வைத்தார். பின்னர் நடந்த பொதுக்கூட்டத்தில் ராகுல் பேசியதாவது: இந்தியாவில் விவசாயிகளின் சிரமங்களை உலகமே வேதனையுடன் பார்த்துக்கொண்டிருக்கிறது. ஆனால்  டெல்லியில் உள்ள அரசுக்கு மட்டும் விவசாயிகளின் வேதனை புரியவில்லை. விவசாயிகள் போராட்டத்திற்கு எதிராக பாப் நட்சத்திரங்கள் வரை கருத்து தெரிவிக்கின்றனர். ஆனால் இந்திய அரசிற்கு அதில் எல்லாம் ஆர்வம் கிடையாது. பாரத  மாதாவுக்கு விவசாயம் மட்டும் தான் சொந்தமாக இருக்கிறது.

இ்தியாவில் லட்சக்கணக்கானோரின்  தொழிலான விவசாயத்தை பிரதமர் மோடி அவர்களிடம் இருந்து பறித்து தன்னுடைய  நண்பர்களுக்கு இலவசமாக கொடுக்க திட்டமிட்டுள்ளார். வேளாண் சட்டங்கள் அமலுக்கு வந்தால் பெரும் முதலாளிகள்  தீர்மானிக்கும் மலிவான விலைக்கு விவசாய பொருட்களை விற்கவேண்டிய பரிதாப நிலை ஏற்படும். நாம் இணைந்து இடைவிடாமல் போராடினால் மட்டுமே மத்திய அரசு சட்டங்களை வாபஸ் பெறும். சட்டங்களை வாபஸ் பெறவேண்டும்  என்று உலகமே வேண்டுகோள் விடுத்து வருகிறது. சட்டம் வாபஸ் பெறப்படும் வரை விவசாயிகளுடன் இணைந்து காங்கிரசும் ேபாராட்டத்தில் ஈடுபடும். இவ்வாறு அவர் பேசினார் திருவனந்தபுரத்தில் இன்று நடக்கும் ‘‘ஐஸ்வர்ய யாத்திரை’’  நிறைவு  நிகழ்ச்சியில் பங்கேற்கும் ராகுல் பின்னர் டெல்லி புறப்பட்டு செல்கிறார்.

3 கிமீ டிராக்டர் ஓட்டினார்

பிற்பகல் 12.30 மணிக்கு  மண்டாடு முதல்  முட்டில் வரை நடந்த டிராக்டர் பேரணியில் ராகுல் காந்தி  பங்கேற்றார். இதில்  70க்கும் மேற்பட்ட டிராக்டர்கள் கலந்து கொண்டன. டிராக்டர் பேரணியில் மண்டாடு முதல் முட்டில் வரை சுமார் 3  கி.மீட்டர் தொலைவுக்கு ராகுல் டிராக்டர் ஓட்டி சென்றார். பின்னர் அவர் மலப்புரம்  மாவட்டம் வண்டூர், நிலம்பூர் உட்பட பல பகுதிகளில்  நடந்த நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.

எரிபொருள் கொள்ளை

பெட்ரோல், டீசல் விலை உயர்வு தொடர்பாக ராகுல்காந்தி தனது டிவிட்டர் பக்கத்தில், ‘‘உங்களது காரில் எரிபொருள் நிரப்பும்போது வேகமாக ஓடும் மீட்டரை பார்க்கும்போது கச்சா எண்ணெய் விலை உயரவில்லை குறைந்துள்ளது என்பதை  நினைவில் கொள்ளுங்கள். மோடி அரசானது உங்களது பாக்கெட்டுக்களை காலி செய்துவிட்டு தனது நண்பர்களின் பாக்கெட்டை நிரப்புகிறது. பாஜ அரசின் எரிபொருள் கொள்ளை” என பதிவிட்டுள்ளார்.

Related Stories: