தரம், திறன் நிரூபிக்கப்படாத பதஞ்சலியின் கொரோனில் மருந்தை இந்திய மக்கள் மீது திணிப்பதா? : மத்திய அரசுக்கு IMA சரமாரி கேள்வி

டெல்லி : பதஞ்சலியின் கொரோனில் மருந்து குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் விளக்கம் அளிக்க வேண்டும் என்று  இந்திய மருத்துவர்கள் கூட்டமைப்பு உத்தரவிட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா பரவல் உச்சத்திலிருந்த கடந்த ஜூன் மாதம் பாபா ராம்தேவின் பதஞ்சலி நிறுவனம் கொரோனில் என்ற ஆயுர்வேத மருந்தை அறிமுகம் செய்தது. இந்த மருந்து அறிவியல் பூர்வமாகவே உருவாக்கப்பட்டுள்ளதாகவும் பாபா ராம்தேவ் கூறியிருந்தார். இருப்பினும், அறிவியல் ஆதாரங்களை எதையும் பதஞ்சலி நிறுவனம் சமர்ப்பிக்கவில்லை. இதனால் ஆயூஷ் அமைச்சகமும் இந்த மருந்திற்கு ஒப்புதல் அளிக்கவில்லை. இதையடுத்து பதஞ்சலி நிறுவனம் கொரோனில் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கக் கூடியது என்று மட்டும் விளம்பரப்படுத்தப்பட்டது.

இந்நிலையில், கடந்த பிப்ரவரி 19ம் தேதி பதஞ்சலி நிறுவனம் கொரோனில் கிட் என்ற மருந்தை வெளியிட்டது. இது முன்பு வெளியிடப்பட்ட கொரோனில் மருந்தின் மேம்படுத்தப்பட்ட ஒன்று என்று விளம்பரப்படுத்தப்பட்டது. இந்த விழாவில் பாபா ராம்தேவ் மத்திய அமைச்சர்கள் ஹர்ஷ் வர்தன், நிதின் கட்கரி ஆகியோரும் கலந்து கொண்டனர். அப்போது பதஞ்சலி நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், கொரோனில் கிட் மருந்திற்கு உலக சுகாதார அமைப்பின் தர சான்றிதழ் திட்டத்தின் கீழ் மத்திய ஆயுஷ் அமைச்சகத்தால் ஒப்புதல் பெறப்பட்ட ஒன்று என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இது தொடர்பாக ஐஎம்ஏ என்று சுருக்கமாக அழைக்கப்படும் இந்தியன் மெடிக்கல் அசோஷியேசன் தலைவர் டாக்டர் ஜெயலால் கூறும்போது, “ஒரு நாட்டின் சுகாதார அமைச்சர் அறிவியல் ரீதியாக நிரூபிக்கப் படாத ஒரு மருந்தை கோவிட்19-க்கு எதிரான துணைச் சிகிச்சை மருந்தாகப் பயன்படுத்தலாம் என்று எப்படி தவறாகப் பரிந்துரைக்கலாம்? இட்டுக்கட்டப்பட்ட ஒரு மருந்தை இந்திய மக்கள் மீது திணிப்பதா? ஒரு பொருள் நேர்மையானதா, நல்லதா என்று அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப் படாத போது அதை பயன்படுத்த அனுமதியளிப்பது அறம்தானா?ஒரு ஏகபோக கார்ப்பரேட் நிறுவனத்தின் தரம் நிரூபிக்கப்படாத மருந்தை மார்க்கெட் லாபம் என்ற பெயரில் நாம் ஆயுர்வேதத்தைக் கலப்படம் செய்ய வேண்டாம்” என்று காட்டமாக கேள்வி எழுப்பினார்.மேலும் பதஞ்சலியின் கொரோனில் மருந்து குறித்து சுகாதார துறை அமைச்சகம் விளக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

Related Stories: