மண்ணச்சநல்லூர் தொகுதி கானல் நீராகவே உள்ளது...: மண்ணச்சநல்லூர் தொகுதி எம்எல்ஏ பரமேஸ்வரி முருகன்...

திருச்சி மாவட்டத்தில் மண்ணச்சநல்லூர், முசிறி, மணப்பாறை, திருவெறும்பூர், லால்குடி, துறையூர் (தனி), ஸ்ரீரங்கம், திருச்சி கிழக்கு, திருச்சி மேற்கு ஆகிய 9 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இதில் மண்ணச்சநல்லூர் அரிசி ஆலைகள் அதிகம் கொண்டதாக இருக்கிறது. அரிசி ஆலை தொழிலாளர்களுடன் இப்பகுதியில் விவசாயிகளும் உள்ளனர். பருத்தி, மக்காசோளம், நிலக்கடலை, வெங்காயம் உள்ளிட்டவை அதிகளவில் விளைகின்றன. மண்ணச்சநல்லூர் தொகுதியில் தற்போது 2,43,272 வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண்கள் 1,17,640, பெண்கள் 1,25,601, இதர 31 என கூடுதல் பெண் வாக்காளர்கள் தொகுதியாகவும் உள்ளன.

மண்ணச்சநல்லூர் தொகுதி அதிமுக எம்எல்ஏவாக பரமேஸ்வரி முருகன் இருக்கிறார். இவரை எதிர்த்து கடந்த 2016 தேர்தலில் திமுக சார்பில் காட்டுக்குளம் கணேசன் போட்டியிட்டார். தேர்தல் பிரசாரத்தின் போது பரமேஸ்வரி முருகன் வாக்குறுதிகளை மக்களிடம் அள்ளி வீசினார். தொகுதிக்குள் கிராமங்கள் தோறும் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவேன். மண்ணச்சநல்லூரில் பஸ் நிலையம் கட்டுவேன். மகளிர் காவல் நிலையம் கொண்டு வருவேன். அரசு கலைக்கல்லூரி கொண்டு வருவேன் என வாக்குறுதிகளை அள்ளி கொட்டினார்.

தேர்தலில் வெற்றி பெற்றதும் நேர்மாறாக நடக்கிறார் என தொகுதி மக்கள் மத்தியில் குற்றச்சாட்டுகள் ஒலிக்க தொடங்கின. மண்ணச்சநல்லூர் பகுதியில் பாதாள சாக்கடை பணிகளால் சாலைகள் முற்றிலும் சிதைந்து போய் உள்ளது. நடந்துகூட போக முடியவில்லை. மழை பெய்தால் எந்த தெருவிலும் வாகனத்தில் செல்ல முடியாத நிலை. அதேபோல் மகளிர் காவல் நிலையம், மண்ணச்சநல்லூர் பஸ் நிலையம், அரசு கலைக்கல்லூரி எல்லாம் கானல் நீராகவே உள்ளது. கிராமப்பகுதிகளில் அடிப்படை வசதிகள் அதலபாதாளத்தில் உள்ளது என்கின்றனர் தொகுதி மக்கள்.

* ‘பல போராட்டங்களுக்கு பிறகு பணிகள் செய்து முடித்துள்ளேன்’

மண்ணச்சநல்லூர் தொகுதி எம்எல்ஏ பரமேஸ்வரி முருகன் கூறும்போது, தொகுதிக்கு கடந்த 5 ஆண்டுகளில் எண்ணற்ற திட்டங்களான மண்ணச்சநல்லூர் புறவழிச்சாலை, பாதாள சாக்கடை திட்டம், அரசு போக்குவரத்து திட்டம் என பல்வேறு திட்டங்கள் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அறிவித்திருந்தாலும், நான் தொகுதியில் எம்எல்ஏவாக பதவி ஏற்ற பின் பல போராட்டங்களுக்கு பிறகு இப்பணிகளை செய்து முடித்திருக்கிறேன். வரும் தேர்தலில் வாய்ப்பளித்தால் ஏற்கனவே அறிவித்துள்ள வாக்குறுதிகளான மகளிர் காவல் நிலையம், மண்ணச்சநல்லூர் பஸ் நிலையம், அரசு கலைக்கல்லூரி, கிராமப்பகுதிகளில் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவேன் என்றார்.

* ‘கொரோனா காலத்தில் அரிசி கூட இனாமாக வழங்காத எம்எல்ஏ’

2016ல் திமுக சார்பில் மண்ணச்சநல்லூர் தொகுதியில் போட்டியிட்ட காட்டுக்குளம் கணேசன் கூறும்போது, தொகுதிக்கென கொடுத்த வாக்குறுதிகள் எதுவுமே நிறைவேற்றவில்லை. அவர் அளித்த வாக்குறுதிகள் எல்லாம் மண்ணோடு மண்ணாக மக்கி போயிட்டு. கொரோனா காலத்தில் ஏழை எளிய மக்கள் எந்தவித வருமானமும் இல்லாமல் வீட்டில் முடங்கி கிடந்தனர். அந்த நேரத்தில் கூட எம்எல்ஏ பரமேஸ்வரி முருகன், தொகுதி மக்களுக்கு 5 கிலோ அரிசி கூட இனாமாக தரவில்லை. ஆனால் எம்எல்ஏ பரமேஸ்வரி முருகன் மட்டும் பிரம்மாண்ட சொகுசு பங்களா, ஹைடெக் ரைஸ்மில் என செல்வ செழிப்போடு உலா வருகிறார் என்றார்.

Related Stories: