விஜய் ஹசாரே டிராபி 7 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லியை வீழ்த்திய மும்பை

ஜெய்பூர்: விஜய் ஹசாரே டிராபி ஒருநாள் போட்டித் தொடரின் எலைட் டி பிரிவு லீக் ஆட்டத்தில், மும்பை அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி அணியை வீழ்த்தியது. ஜெய்பூரியா வித்யாலயா மைதானத்தில் நேற்று நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பந்துவீசியது. டெல்லி தொடக்க வீரர்கள் அனுஜ் ராவத், ஷிகர் தவான் இருவரும் ஒரு ரன் கூட எடுக்காமல் ரன் அவுட்டாகி வெளியேறினர். அடுத்து வந்த நிதிஷ் ராணா (2 ரன்), ஜான்டி சித்து (0), ஷிடிஷ் ஷர்மா (5), லலித் யாதவ் (5) ஆகியோர் வந்த வேகத்தில் பெவிலியன் திரும்பி அணிவகுக்க, டெல்லி அணி 18.5 ஓவரில் 32 ரன்னுக்கு 6 விக்கெட் இழந்து தடுமாறியது.

ஹிம்மத் சிங் - ஷிவாங்க் வஷிஸ்ட் ஜோடி 7வது விக்கெட்டுக்கு பொறுப்புடன் விளையாடி 122 ரன் சேர்த்தது. ஷிவாங்க் 55 ரன் (70 பந்து, 6 பவுண்டரி) விளாசி முலானி பந்துவீச்சில் குல்கர்னி வசம் பிடிபட்டார். 9வது வீரராகக் களமிறங்கிய கேப்டன் பிரதீப் சங்வான் பொறுப்புடன் கம்பெனி கொடுக்க, ஹிம்மத் சிங் சதம் அடித்தார். டெல்லி அணி 50 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 211 ரன் எடுத்தது. ஹிம்மத் 106 ரன் (145 பந்து, 6 பவுண்டரி, 2 சிக்சர்), பிரதீப் 28 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். மும்பை பந்துவீச்சில் தவால் குல்கர்னி 3, ஷாம்ஸ் முலானி 2 விக்கெட் வீழ்த்தினர்.

அடுத்து களமிறங்கிய மும்பை அணி 31.5 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 216 ரன் எடுத்து எளிதாக வென்றது. யாஷஸ்வி ஜெய்ஸ்வால் 8, கேப்டன் ஷ்ரேயாஸ் அய்யர் 39, சூரியகுமார் யாதவ் 50 ரன் எடுத்து (33 பந்து, 6 பவுண்டரி, 2 சிக்சர்) பெவிலியன் திரும்பினர். தொடக்க வீரர் பிரித்வி ஷா 105 ரன் (89 பந்து, 15 பவுண்ட , 2 சிக்சர்), ஷிவம் துபே 9 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். பிரித்வி - சூரியகுமார் ஜோடி 3வது விக்கெட்டுக்கு 93 ரன் சேர்த்தது குறிப்பிடத்தக்கது. மும்பை அணி 4 புள்ளிகளை தட்டிச் சென்றது. நேற்று நடந்த மற்ற லீக் ஆட்டங்களில் பெங்கால், சவுராஷ்டிரா, சண்டிகர், மகாராஷ்டிரா, ராஜஸ்தான், உத்தரகாண்ட், அசாம், நாகாலாந்து அணிகள் வெற்றி பெற்றன.

Related Stories:

>