பங்குச்சந்தையில் பணம் போடறீங்களா... உஷார் தொழில் கடனை முதலீடு செய்து பல லட்சத்தை இழந்த பரிதாபம்: மொபைல் ஆப்சை நம்பியவருக்கு நேர்ந்த விபரீதம்

மும்பை: செபியில் பதிவு செய்யாத நிறுவனத்தில் முதலீடு செய்த வாலிபர், 11 லட்சம் ரூபாயை இழந்தார். பங்குச்சந்தைகள் பெரும் ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டு வருகிறது. இதனால் முதலீட்டாளர்கள் பலர் தயக்கம் காட்டுகின்றனர். இருப்பினும், திடீரென உயரும் பங்குச்சந்தையை பார்த்து பலர் பங்குச்சந்தையில் ஆன்லைன் மூலம் முதலீடு மேற்கொண்டு வருகின்றனர். அதிலும், கொரோனா ஊரடங்கு போன்ற காரணங்களால் வேலை இழந்த சிலர் கூட, இப்படி ஆன்லைன் முதலீட்டில் சிக்கி ஏமாறுவது தொடர்கதையாகி வருகிறது. மும்பையை சேர்ந்த 24 வயது வாலிபர் ஒருவர், தொழில் தொடங்க வாங்கிய பணத்தை, பங்குச்சந்தையில் போடுவதாக நினைத்து, பதிவு செய்யாத நிறுவனம் மூலம் முதலீடு செய்து ஏமாந்துள்ளார்.

இந்த வாலிபர் தொழில் தொடங்குவதற்காக ரூ.20 லட்சம் கடன் வாங்கியுள்ளார். இருப்பினும், இதில் ஒரு பகுதி பணத்தை பங்குச்சந்தையில் முதலீடு செய்ய நினைத்துள்ளார். ஆர்வமாக இன்டர்நெட்டில் தேடிக்கொண்டிருந்தபோது, ஆன்லைன் டிரேடிங் நிறுவனம் ஒன்றின் இணைய முகவரி கிடைத்தது. பங்கு பரிவர்த்தனை செய்யும் அந்த நிறுவனத்தில் முதலீடு செய்வதற்கான இணைப்புகள் காணப்பட்டன. ‘பங்குச்சந்தைதான் திடீரென எகிறி வருகிறதே... நாமும் முதலீடு செய்தால் என்ன?’’ என்று நினைத்த அந்த வாலிபர், ஆர்வக்கோளாறில் அந்த டிரேடிங் நிறுவனத்தின் மொபைல் ஆப்சை பதிவிறக்கம் செய்து, மொபைல் போனில் நிறுவியுள்ளார். அதில் கேட்ட தகவல்களை நிரப்பி, தனக்கான கணக்கை துவக்கினார்.

அதன்மூலம், தான் வங்கியில் கடன் வாங்கி வைத்திருந்த ரூ.20 லட்சத்தில் ஒரு பகுதியை முதலீடு படிப்படியாக முதலீடு செய்து வந்துள்ளார். கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் இருந்தே இவ்வாறு சிறுகச்சிறுக முதலீடு செய்து வந்துள்ளார். இவ்வாறு மொத்தம் ரூ.11 லட்சம் முதலீடு செய்துள்ளார்.

பின்னர் அவ்வப்போது தனது பங்கு முதலீட்டின் நிலை குறித்து அந்த ஆப்ஸ் மூலம் கண்காணித்து வந்தார். அப்போது, இவர் முதலீடு செய்த நிறுவனத்தின் பங்கு மதிப்பு சற்று உயர்ந்துள்ளது. அதன்பிறகு கடந்த ஆண்டு டிசம்பரில், மீண்டும் கணக்கை ஆய்வு செய்துள்ளார். அப்போதுதான், தனது பங்கு முதலீட்டு கணக்கில் இருந்த பணம் வேறொரு கணக்கிற்கு மாற்றம் செய்யப்பட்டது தெரிய வந்தது. பதறிப்போன அவர், உடனே சம்பந்தப்பட்ட நிறுவனம் வழங்கியிருந்த வாடிக்கையாளர் சேவை மைய எண்ணுக்கு தொடர்பு கொண்டார். அதில் பேசியவர், ‘‘நீங்கள் முதலீடு செய்த பணம் வர்த்தக காரணங்களுக்காக பயன்படுத்தப்பட்டு விட்டது. இதை திருப்பித்தர முடியாது’’ என நிறுவனம் தரப்பில் கூலாக கூறிவிட்டனர்.

அதன்பிறகு இந்த சம்பவம் தொடர்பாக இந்திய பங்கு பரிவர்த்தனை கட்டுப்பாட்டு வாரியத்துக்கு (செபி) புகார் அனுப்பினார். அப்போதுதான், அந்த வாலிபர் முதலீடு செய்த டிரேடிங் நிறுவனம் செபியில் பதிவு செய்யப்படாதது என தெரியவந்தது. இதுகுறித்து நவி மும்பையில் உள்ள காவல் நிலையத்தில் அந்த வாலிபர் புகார் செய்தார். இதன்படி, இபியோ 420, 66டி ஆகிய பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘பெரும்பாலான மக்கள் பங்குச்சந்தையில் ஆர்வக்கோளாறு காரணமாக முதலீடு செய்கின்றனர். இதற்காக டிரேடிங் நிறுவனங்களை நாடுகின்றனர். ஆனால், அதன் பின்னணி குறித்து ஆராயாமல் தாங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை முதலீடு செய்து ஏமாந்து விடுகின்றனர். மேற்கண்ட புகார் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து, சம்பந்தப்பட்ட நிறுவனத்துக்கு சம்மன் அனுப்பியுள்ளோம். விரைவில் விசாரணை நடத்தப்படும்’’ என்றார்.

* தொழில் கடனாக ரூ.20 லட்சம் வாங்கிய வாலிபர் ஒருவர், பங்குச்சந்தையில் முதலீடு செய்ய ஆசைப்பட்டு பின்னணி ஆராயாமல் ஒரு நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளார்.

* நிறுவன இணையதளத்தில் இருந்த இணைப்பு மூலம் மொபைல் போனில் ஆப்ஸ் பதிவிறக்கம் செய்து, வங்கிக் கணக்கில் இருந்து சிறிது சிறிதாக பரிமாற்றம் செய்து பங்குகளில் சுமார் ரூ.11 லட்சம் முதலீடு செய்தார்.

* சில மாதங்கள் கழித்து பார்த்தபோது, முதலீடு செய்த பணம் வேறு கணக்கிற்கு மாற்றப்பட்டுள்ளது.

* வர்த்தக பயன்பாட்டுக்கு எடுத்துக்கொண்டதால் பணத்தை திருப்பித்தர முடியாது என நிறுவனம் மறுத்து விட்டது.

Related Stories: