உழவர் உற்பத்தியாளர் குழுக்களுக்கு ரூ.1 கோடியில் பண்ணை இயந்திரங்கள் வழங்கல்

ஊட்டி : உழவர் உற்பத்தியாளர் குழுக்களுக்கு தொகுப்பு நிதியிலிருந்து ரூ.1.04 கோடி மதிப்பில் பண்ணை இயந்திரங்கள் வழங்கப்பட்டன.

தோட்டக்கலைத்துறை சார்பில் கூட்டு பண்ணைய திட்டம் 2020-2021ம் ஆண்டிற்கான உழவர் உற்பத்தியாளர் குழுக்களுக்கு தொகுப்பு நிதியிலிருந்து பண்ணை இயந்திரங்கள் வழங்கும் நிகழ்ச்சி ரோஜா பூங்காவில் நடந்தது. மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் கப்பச்சி வினோத், குன்னூர் எம்.எல்.ஏ. சாந்திராமு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தலைமை வகித்து 20 உழவர் உற்பத்தியாளர் குழுக்களுக்கு தொகுப்பு நிதியிலிருந்து ரூ.1 கோடி மதிப்பில் பண்ணை இயந்திரங்களை வழங்கினார். மேலும், வேளாண் பொறியியல் துறை சார்பில் சமான் கிஷான் யோஜனா திட்டத்தின்கீழ் ரூ.4.6 லட்சம் மதிப்பில் (மானிய தொகை ரூ.2.31 லட்சம் ) ஒரு விவசாயிக்கு டிராக்டர் வழங்கப்பட்டது.

பின்னர், கலெக்டர் இன்னசென்ட் திவ்யா பேசியதாவது:

நீலகிரி மாவட்டத்தில் சிறு குறு விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் விதமாக கூட்டுப்பண்ணைய திட்டத்தின் கீழ் சிறுகுறு விவசாயிகளை ஒருங்கிணைத்து உழவர் ஆர்வலர் குழு மற்றும் உழவர் உற்பத்தியாளர் குழுக்கள் உருவாக்கப்பட்டு, அக்குழுக்களுக்கு தேவையான தொழிற்நுட்பங்கள் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, 2020-2021ம் ஆண்டில் நீலகிரி மாவட்டத்தில் 4 வட்டாரங்களில் உள்ள 2 ஆயிரம் சிறு, குறு விவசாயிகளை ஒருங்கிணைத்து 20 உழவர் உற்பத்தியாளர் குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

இவ்வாறு உருவாக்கப்பட்ட ஒவ்வொரு உழவர் உற்பத்தியாளர் குழுக்களுக்கும் அரசின் சார்பாக பண்ணை இயந்திரங்கள் வாங்க தொகுப்பு நிதியாக தலா ரூ.5 லட்சம் வீதம் 20 குழுக்களுக்கு ரூ.1 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

பயிர் திட்ட செயலாக்கத்தின்படி தேவையான பண்ணை இயந்திரங்கள் வட்டார அளவில் ஊட்டி 48, குன்னூர் 3, கூடலூர் 19, கோத்தகிரி 33 இயந்திரங்கள் என மொத்தம் 103 பண்ணை இயந்திரங்கள் மாவட்ட குழுவினால் ஒப்புதல் அளிக்கப்பட்டு தொகுப்பு நிதியில் வாங்க அனுமதி அளிக்கப்பட்டு 20 உற்பத்தியாளர் குழுக்களுக்கு டிராக்டர், பவர் டில்லர் ஆகிய உழவர் இயந்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன.

அதேபோல், வேளாண் பொறியியல் துறை சார்பில் சமான் கிஷான் யோஜனா திட்டத்தின் கீழ் ரூ.4.6 லட்சம் மதிப்பில் (மானிய தொகை ரூ.2.31 லட்சம்) ஒரு விவசாயிக்கு டிராக்டர் ஆகியவற்றை வழங்கி, அவர்களின் வாழ்வாதாரத்தினை உயர்த்த வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்நிகழ்ச்சியில், நீலகிரி வேளாண் விற்பனை குழு தலைவர் அர்சுணன், தோட்டக்கலைத்துறை இணை இயக்குநர் சிவசுப்பிரமணியம் சாம்ராஜ், வேளாண் பொறியியல் துறை செயற்பொறியாளர் ராதாகிருஷ்ணன் உட்பட விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: