சேலத்தில் முன்னறிவிப்பின்றி 10 முகவர்களுக்கு 8 ஆயிரம் லிட்டர் பால் சப்ளை நிறுத்தம்-விநியோகம் பாதிக்கப்பட்டதாக குற்றச்சாட்டு

சேலம் : சேலத்தில் முன்னறிவிப்பின்றி 10 முகவர்களுக்கு ஆவின் நிர்வாகம் பால் சப்ளையை நிறுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

சேலம்-இரும்பாலை ரோடு சித்தனூரில் ஆவின் பால்பண்ணை செயல்பட்டு வருகிறது. சேலம் மாவட்டத்தில் 600க்கும் மேற்பட்ட முகவர்கள், பண்ணையிலிருந்து பால் மற்றும் இதர பொருட்களை பெற்று பொதுமக்களுக்கு விநியோகம் செய்து வருகின்றனர்.

இதனிடையே ஆவின் மூலம் நேரடியாக விநியோகஸ்தர்கள் நியமனம் செய்வதால், பல ஆண்டுகளாக இத்தொழில் ஈடுபட்டு வரும் முகவர்கள் பாதிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனை கண்டித்து, ஆவின் பால் முகவர்கள் மற்றும் விற்பனை பணியாளர்கள் சங்கம் சார்பில், கடந்த 3ம் தேதி காத்திருப்பு போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து தகவல் வெளியானதும், கடந்த மாதம் 29ம் தேதி ஆவின் நிர்வாகம், முகவர்கள் மற்றும் போலீசார் கலந்து ெகாண்ட ஆலோசனை கூட்டம் நடந்தது. அப்போது, முகவர்களின் கோரிக்கைகளை குறித்து விவாதிக்கப்பட்டு, தீர்மானமாக நிறைவேற்றப்பட்டதால், காத்திருப்பு போராட்டம் கைவிடப்பட்டது.

 

இதனிடையே, அந்த ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு, முகவர்கள் சங்கத்தை சேர்ந்த முக்கிய நிர்வாகிகளுக்கு சரிவர பால் விநியோகம் செய்யப்படவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று சங்கத்தின் மாநில தலைவர் அருணாசுந்தர், பொதுச் செயலாளர் ஜவகர், துணைத்தலைவர் சந்திரசேகரன் உள்பட முக்கிய நிர்வாகிகளுக்கு சப்ளை செய்யப்பட்டு வந்த, சுமார் 8 ஆயிரம் லிட்டர் பால் முற்றிலுமாக நிறுத்தப்பட்டது.

இதனால், சேலம் அஸ்தம்பட்டி, பொன்னமாப்பேட்டை, அழகாபுரம், அம்மாப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் பால் விநியோகம் பாதிக்கப்பட்டது. இதனால், சம்பந்தப்பட்ட முகவர்கள், அருகில் இருந்தவர்களிடம் பாலை பெற்று மக்களுக்கு வழங்கினர்.

இதுகுறித்து முகவர்கள் கூறுகையில், “ஆவின் நிர்வாகம் பழிவாங்கல் நடவடிக்கையாக திடீரென, எந்தவித முன்னறிவிப்பும் இன்றி 8 ஆயிரம் லிட்டர் பால் சப்ளையை நிறுத்திவிட்டது. நியாயமான கோரிக்ைகயை வலியுறுத்தி வந்த நிலையில், இதுபோன்ற நடவடிக்கை மேற்கொண்டிருப்பது வேதனை அளிக்கிறது,” என்றனர்.

Related Stories: