தேர்தலில் சொன்னதை செய்கிறார் அதிபர் பைடன் அமெரிக்காவில் கிரீன்கார்டு ஒதுக்கீடு முறையை ஒழிக்கும் மசோதா தாக்கல்: இந்திய ஐடி ஊழியர்களுக்கு கொண்டாட்டம்

வாஷிங்டன்: வெளிநாட்டினருக்கு குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே நிரந்தர குடியுரிமை அளிப்பதற்கான ஒதுக்கீடு முறையை ஒழிக்கும் புதிய குடியுரிமை மசோதா, அமெரிக்க பிரதிநிதிகள் சபையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் ஆட்சியின்போது, அமெரிக்காவில் குடியேற விரும்பியவர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. மேலும், அமெரிக்காவில் குடியேறி நிரந்தர விசா பெறுவதற்கும் அதிக கட்டுப்பாடுகளை எதிர்கொள்ள வேண்டி இருந்தது. இந்நிலையில், புதிய அதிபர் ஜோ பைடன் பதவியேற்றவுடன் விரைவில் குடியுரிமை சட்டம் கொண்டு வரப்படும் என்றார். இதனை தொடர்ந்து, அமெரிக்க பிரதிநிதிகள் சபையில் நேற்று முன்தினம் குடியுரிமை மசோதாவை அதிபர் ஜோ பைடன் நிர்வாகம் அறிமுகம் செய்தது. இந்த குடியேற்ற மசோதா பிரதிநிதிகள், செனட் சபை இரண்டிலும் நிறைவேற்றப்பட வேண்டும். பின்னர், இந்த சட்டத்துக்கு ஒப்புதல் அளிக்கப்படும். அவ்வாறு குடியுரிமை மசோதா சட்டமாக்கப்பட்டால் ஒரு கோடியே 10 லட்சம் ஆவணமற்ற தொழிலாளர்கள் பயன் பெறுவார்கள். லட்சக்கணக்காக வெளிநாட்டை சேர்ந்தவர்களும் பயன் பெறுவார்கள் என்பதால் இந்த மசோதா மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதன் மூலம்,

* வேலைக்கு வரும் வெளிநாட்டினருக்கு, அந்தந்த நாடுகளுக்கு ஏற்ப நிரந்தர குடியுரிமை அளிப்பதற்கான ஒதுக்கீடு நடைமுறை ஒழிக்கப்படும்.

* இந்த குடியேற்ற சட்டத்தின் மூலமாக ஆயிரக்கணக்கான இந்திய தகவல் தொழில்நுட்ப நிபுணர்கள், அவர்களின் குடும்பத்தினர் பயன் பெறுவார்கள்.

* அமெரிக்க குடியுரிமை சட்டம் -2021 ஆனது, 10 ஆண்டுகளுக்கும் மேலாக கிரீன் கார்டுக்காக காத்திருப்போருக்கு நிரந்தர குடியுரிமை வழங்குவதற்கும் முன்மொழிகிறது.

இந்த சட்டத்தின் மூலம் அமெரிக்காவில் பணியாற்றும் ஏராளமான இந்திய ஐடி ஊழியர்கள் பலனடைவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: