குஜிலியம்பாறை : குஜிலியம்பாறை ஒன்றியத்தில் கடந்த 2018ம் ஆண்டு தேர்வு செய்யப்பட்ட 126 பெண்களுக்கு திருமண உதவித்தொகை இன்னும் வழங்காமல் இழுத்தடிப்பு செய்து வருகின்றனர்.கிராமப்புற, நகர்புறங்களில் உள்ள ஏழை பெண்களின் திருமணத்திற்கு தமிழக அரசு உதவித்தொகை வழங்குகிறது.
ஏழை பெண்களின் பெற்றோருக்கு நிதியுதவி வழங்கவும், பெண்களின் கல்வி தரத்தை உயர்த்தும் நோக்கில் மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவாக இந்த திருமண உதவித்தொகை வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் 10ம் வகுப்பு படித்த ஏழை பெண்களுக்கு ரூ.25, 000 திருமண உதவித்தொகை, 8 கிராம் தாலிக்கு தங்கமும் வழங்கப்படுகிறது. அதேபோல் டிகிரி அல்லது டிப்ளமோ படித்த பெண்களுக்கு ரூ.50, 000 திருமண உதவித்தொகை, 8 கிராம் தாலிக்கு தங்கம் வழங்கப்படுகிறது.
இந்நிலையில் குஜிலியம்பாறை ஒன்றியத்தில் கடந்த 2018ம் ஆண்டு 1.1.2018 முதல் 5.12.2018 வரை இத்திட்டத்தில் 126 பெண்கள் உதவித்தொகை பெறுவதற்கு பயனாளிகளாக தேர்வு செய்யப்பட்டனர். ஆனால் 2 வருடங்கள் ஆகியும், இவர்களுக்கு இன்னும் திருமண உதவித்தொகை, தாலிக்கும் தங்கம் வழங்கப்படாமல் இழுத்தடிப்பு செய்கின்றனர். இதுமட்டுமன்றி 2019- 2020ம் ஆண்டிற்கு இத்திட்டத்தில் 400க்கும் மேற்பட்டோர் பயனாளிகளாக உள்ளனர். இப்பயனாளிகளுக்கு எப்போது திருமண உதவித்தொகை கிடைக்கும் என்பது கேள்விக்குறியாகியுள்ளது. ஏழை பெண்களின் திருமணத்திற்கு உதவும் வகையில், திருமண உதவித்தொகை திட்டம் அமல்படுத்தப்பட்டது. ஆனால் தற்போது திருமண உதவித்தொகை கிடைக்காமல் வருடக்கணக்கில் இழுத்தடிப்பு செய்து வருவதாக பெண்கள் குமுறுகின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம் குஜிலியம்பாறை ஒன்றியத்தில் கிடப்பில் போடப்பட்ட திருமண உதவித்தொகை விரைவாக கிடைத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.