ராஜஸ்தானை தொடர்ந்து மத்திய பிரதேசத்திலும் பெட்ரோல் 100ஐ கடந்தது: சென்னையில் 91.98க்கு விற்பனை

புதுடெல்லி:  சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை இறக்குமதி செலவு, டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு ஆகியவற்றுக்கு ஏற்ப பெட்ரோல் மற்றும் டீசல் விலையை இந்திய எண்ணெய் நிறுவனங்கள் தினமும் மாற்றி அமைக்கின்றன. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வை காரணம் காட்டி பெட்ரோல், டீசல் விலை கடந்த சில நாட்களாக தொடர்ந்து அதிகரித்து வருகிறது.   நாட்டிலேயே முதல் முறையாக நேற்று முன்தினம் ராஜஸ்தானில் உள்ள ஸ்ரீகங்காநகரில் பெட்ரோல் விலை 100 ரூபாயை தாண்டியது. இதுபோல், மத்திய பிரதேசத்தில் உள்ள அனுப்பூரில் பெட்ரோல் விலை நேற்று 34 காசு உயர்ந்து 100.25 ஆக உயர்ந்தது. டீசல் 32 காசு அதிகரித்து 90.35க்கு விற்கப்பட்டது.

பிற நகரங்களை பொறுத்தவரை சென்னையில் பெட்ரோல் 91.98, மும்பையில் 96.32, டெல்லியில் 89.88, கொல்கத்தாவில் 91.11, பெங்களூருவில் 92.89க்கும், டீசல் சென்னையில் 85.31, மும்பையில் 87.32, டெல்லியில் 80.27, கொல்கத்தாவில் 91.11, பெங்களூருவில் 85.09க்கும் விற்கப்பட்டது. தொடர்ந்து 10 நாட்களில் பெட்ரோல் லிட்டருக்கு 2.93, டீசல் 3.14 உயர்ந்துள்ளது. சில்லரை விற்பனையில் பெட்ரோலுக்கு 60 சதவீதம், டீசலுக்கு 54 சதவீதம் மத்திய, மாநில வரிகளே உள்ளன. மத்திய அரசு பெட்ரோலுக்கு கலால் வரியாக 32.90, டீசலுக்கு 31.80 விதிக்கிறது. வரி உயர்வு காரணமாக, கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் இருந்து இதுவரை பெட்ரோல் லிட்டருக்கு 20.29, டீசலுக்கு 17.98 உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories: