சட்டப் பேரவை தேர்தல் நெருங்கும் நிலையில் அமைச்சர் மீது பெட்ரோல் குண்டு வீச்சு: மேற்குவங்க ரயில் நிலையத்தில் நேற்றிரவு பயங்கரம்

முர்ஷிதாபாத்: மேற்குவங்க மாநில அமைச்சரின் மீது நேற்றிரவு நடந்த பெட்ரோல் வெடிகுண்டு வீச்சில் அமைச்சர் உள்ளிட்ட 3 பேர் படுகாயமடைந்தனர். தேர்தல் நெருங்கும் நிலையில் அம்மாநிலத்தில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. மேற்குவங்கத்தில் சட்டமன்றத் தேர்தல்கள் விரைவில் நடைபெறவுள்ள நிலையில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் - பாஜக கட்சித் தொண்டர்களுக்கிடையே மோதல்களும் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில், நேற்றிரவு 10 மணியளவில் அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி அரசின் ெதாழிலாளர் நலத்துறை அமைச்சர் ஜாகிர் உசேன் மற்றும் அவரது கான்வாய் கொல்கத்தா செல்வதற்காக நிமிதா ரயில் நிலையத்தை நோக்கிச் சென்றது.

பின்னர், அமைச்சர் மற்றும் அவருடன் சிலர் பிளாட்பார்ம்: 2ல் காத்திருந்தனர். அப்போது அமைச்சரை நோக்கி மர்ம கும்பல் ஒன்று பெட்ரோல் குண்டுகளை வீசியது. பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்தில் அமைச்சர் ஜாகிர் உசேன் மற்றும் 2 பேர் படுகாயமடைந்தனர். பெட்ரோல் குண்டு வீசிய மர்ம கும்பல் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டது. தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அமைச்சர் உள்ளிட்டோரை மீட்டு  ஜாங்கிபூர் துணைப்பிரிவு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர், அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்ததால் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட பின், கொல்கத்தா மருத்துவமனைக்கு இன்று அதிகாலை அழைத்து செல்லப்பட்டார். இருந்தும், அமைச்சரின் உடல்நிலை சீராக இருப்பதாக முர்ஷிதாபாத் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் மருத்துவர் ஏ.கே.பெர்ரா கூறினார்.

அமைச்சர் மீது வெடிகுண்டு வீசி தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பான சிசிடிவி வீடியோ பதிவுகள் தற்போது வெளியாகி உள்ளது. இந்த வீடியோவின் அடிப்படையில், மர்ம கும்பலை போலீசார் தேடிவருகின்றனர். முன்னதாக பாஜக - திரிணாமுல் கட்சி தொண்டர்கள் மோதிக் கொண்ட விவகாரம் தொடர்பான தகவல்களைப் பெறுவதற்காக உள்ளூர் பாஜக தலைவர்கள் சிலர் புல்பகன் பகுதியில் உள்ள போலீஸ் துணை ஆணையர் அலுவலகத்தை நோக்கிச் சென்றனர். அப்போது அவர்களுக்கு எதிராக திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்கள் கோஷங்களை எழுப்பினர். இதனால் இரு தரப்பிலும் மோதல் ஏற்பட்டது.

இருபுறமும் ஒருவருக்கொருவர் செங்கல், கற்களை வீசி தாக்கிக் கொண்டனர்.  இந்த சம்பவத்தின் எதிரொலியாக அமைச்சர் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மாநில அமைச்சர் ஜாகிர் உசேன் மீதான தாக்குதலை மேற்குவங்க பாஜக தலைவர் கைலாஷ் விஜயவர்ஜியா கண்டித்துள்ளார். அவர் வெளியிட்ட டுவிட்டில், ‘நிமிதா ரயில் நிலையம் அருகே ஜாகிர் உசேன் மீது பெட்ரோல் குண்டு வீசி தாக்குதல் நடத்தியதை கடுமையாக கண்டிக்கிறேன். அவர் விரைவாக குணமடைய வேண்டும்’ என்று தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக மத்திய ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் வெளியிட்ட டுவிட்டிலும், ‘நிமிதா ரயில் நிலையம் அருகே நடந்த வெடிகுண்டு சம்பவம் மிகவும் கண்டிக்கத்தக்கது’ என்று தெரிவித்துள்ளார். தேர்தல் நெருங்கும் நிலையில், அமைச்சர் மீது பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் மேற்குவங்கத்தில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories: