தன் மீதான விசாரணை விவரங்களை போலீஸ் வெளியிட தடை விதிக்கக்கோரி திஷா ரவி டெல்லி ஐகோர்ட்டில் வழக்கு..!!

டெல்லி: டெல்லி போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ள சுற்றுச்சூழல் ஆர்வலர் திஷா ரவி, தன் மீதான விசாரணை குறித்த தகவல்களை போலீசார் வெளியிட தடை விதிக்கக்கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். புதிய வேளாண் சட்டங்களை திரும்பபெறக்கோரி வலியுறுத்தி டெல்லியில் நடைபெற்று வரும் விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் விண்ணப்பம் ஒன்றை சுவீடனை சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலரான கிரேட்டா தென்பர்க் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.

இந்த விண்ணப்பத்தை பகிர்ந்தமைக்காக பெங்களூருவை சேர்ந்த 21 வயதான சுற்றுச்சூழல் ஆர்வலர் திஷா ரவி கடந்த 13ம் தேதி கைது செய்யப்பட்டார். அவர் மீது தேசத்துரோகம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு 5 நாட்கள் போலீஸ் காவலும் விதிக்கப்பட்டுள்ளது. அவர் கைது செய்யப்பட்டதற்கு எதிராக அரசியல்வாதிகள் மற்றும் பிற செயற்பாட்டாளர்களிடமிருந்து பல்வேறு விமர்சனங்கள் தொடர்ந்து எழுந்து வருகின்றன. இது எதிர்ப்பாளர்களை மௌனமாக்குவதற்காக அரசாங்கம் எடுத்துவரும் முயற்சி என குற்றம் சாட்டி வருகின்றனர்.

சமூக ஊடங்கங்களில் திஷாவுக்கு பெரும் ஆதரவு கிளம்பியுள்ளது. இந்நிலையில், தற்போது டெல்லி உயர்நீதிமன்றத்தை நாடியுள்ள திஷா ரவி, தன் மீதான விசாரணை விவரங்களை போலீசார் ஊடகங்களில் வெளியிட தடை விதிக்கக்கோரி மனுதாக்கல் செய்துள்ளார். மேலும் தனது தனிப்பட்ட செல்போன் உரையாடல்களை ஊடங்களில் வெளியிட தடை விதிக்க வேண்டும் என்றும் திஷா ரவி தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார். இந்த மனு விரைவில் பட்டியலிடப்பட்டு விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories: