ராஜிவ் கொலை குற்றவாளிகளை மன்னித்துவிட்டேன்: ராகுல் காந்தி உருக்கம்

புதுச்சேரி: ராஜிவ் காந்தி கொலை வழக்கில் தனிப்பட்ட முறையில் யார் மீதும் கோபம், வன்மம் எனக்கு இல்லை. அதில் தொடர்புடையவர்களை நான் மன்னித்துவிட்டேன். வன்முறை மூலம் நம்மிடம் இருந்து எதையும் எடுத்துவிட முடியாது என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். புதுவை வந்த ராகுல் காந்தி சோலை நகரில் மீனவர்களுடன் கலந்துரையாடினார். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு புதுச்சேரி பாரதிதாசன் அரசு மகளிர் கல்லூரிக்கு சென்றார். அங்கு பாரதிதாசன் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர், கல்லூரி மாணவிகளுடன் கலந்துரையாடினார். அவர்கள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்து ராகுல் காந்தி பேசியதாவது: அனைத்து துறைகளிலும் பெண்களுக்கு 50 சதவீதம் என்பதைவிட 60 சதவீதம் வழங்குவது அவசியம். நீதிமன்றங்கள், மக்களவை, மாநிலங்களவை, சட்டபேரவை உள்ளிட்டவற்றை இளம்பெண்கள் அதிக அளவு ஆக்கிரமித்து, அவை சுயமாக செயல்படும்படி செய்தால் ஜனநாயகம் வலுப்படும். நாட்டில் பல்வேறு கலாசாரங்கள், மொழிகள் உள்ளன. அவற்றை பாதுகாக்க வேண்டும். தமிழ் கலாசாரத்தை மதிக்கிறேன்.

மொழி, கலாசாரம் என எதையும் நான் மற்றவர்கள் மீது திணிக்கமாட்டேன். பல்வேறு சிந்தனைகளை கொண்டது தான் இந்தியா. பெண்களுக்கு பெண்களால் தான் பாதுகாப்பு அளிக்க முடியும். பெண்கள் பாதுகாப்பு தொடர்பான சட்டங்களில் திருத்தம் கொண்டு வர வேண்டும். கேள்வி கேட்கும் மனப்பான்மையை மாணவ, மாணவிகள் வளர்த்துக்கொள்ள வேண்டும். அரசியல்வாதிகளிடம் எவ்வித கூச்சமும் இன்றி கேள்வி எழுப்ப வேண்டும். ராஜிவ் காந்தி கொலை வழக்கில் தனிப்பட்ட முறையில் யார் மீதும் கோபம், வன்மம் எனக்கு இல்லை. அப்பாவை இழந்தது கடினமான தருணம். இதயமே பிளந்தது போன்ற உணர்வு அப்போது இருந்தது. அப்பாவை இழப்பது எவ்வளவு வேதனையாக இருக்கும் என்பது எல்லோருக்கும் தெரியும்.

அதில் தொடர்புடையவர்களை நான் மன்னித்துவிட்டேன். வன்முறை மூலம் நம்மிடம் இருந்து எதையும் எடுத்துவிட முடியாது. என்னுடைய தந்தை இப்போதும் என் மனதில் வாழுகிறார். அவர் இறந்ததாக நான் நினைக்கவில்லை. இவ்வாறு அவர் பேசினார். கூட்டத்தில் முதல்வர் நாராயணசாமி, காங்., மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ், சபாநாயகர் சிவக்கொழுந்து, அமைச்சர்கள் கந்தசாமி, ஷாஜகான், கமலக்கண்ணன், வைத்திலிங்கம் எம்பி, அகில இந்திய காங்., செயலாளர் சஞ்சய் தத், தமிழ்நாடு காங்., தலைவர் கே.எஸ்.அழகிரி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

* அடுத்த முறை கடலுக்குள் வந்து மீன்பிடிப்பேன்

புதுச்சேரி வந்த காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவர் ராகுல்காந்தி சோலை நகர் மீனவ கிராமத்தில் மீனவ மக்களுடன் கலந்துரையாடினார். அப்போது அவர் பேசியதாவது: வீட்டில் இருந்து கிளம்பும்போது ஒருவித மனநிலையில் கிளம்பினேன். இங்கு வந்த பிறகு எனது சொந்த வீட்டுக்கு வந்தது போல் உணர்கிறேன். விவசாயிகளுக்கு ஒரு பிரச்னை என்றால் அந்த துறை அமைச்சரை சந்திக்க முடிகிறது. மீனவர்களின் பிரச்னைகளுக்கு யாரை அணுகுவது? மத்திய அரசு மீனவர்களுக்கென அமைச்சரை நியமித்தால்தான், அவர்களின் பிரச்னைகள் குறித்து பேச முடியும்? விவசாயிகளுக்கு வழங்குவது போல் மீனவர்களுக்கும் சலுகைகள் வழங்கப்பட வேண்டும். ஓய்வூதியம், காப்பீடு, கடன் வசதி, டீசல் உள்ளிட்டவை வழங்கப்பட வேண்டும். மீன்பிடி பொருட்களை நவீனமானதாக வழங்க வேண்டும். இவ்வாறு பேசினார்.

ராகுல்காந்தியிடம் ஒருசிலர் ஆங்கிலத்தில் கேள்வி கேட்டனர். அதற்கு, தமிழ் ஒரு சிறந்த மொழி. எனவே நீங்கள் தமிழில்தான் கேள்வி கேட்க வேண்டும் என்றார். இதையடுத்து அனைவரும் தமிழில் கேள்வி கேட்டனர். மீனவர்களின் கேள்விகளுக்கு ராகுல்காந்தி பதில் அளித்து பேசுகையில், மத்திய பாஜ அரசு சிறு மற்றும் குறுதொழில்களை நசுக்கி வருகிறது. அதற்கு பதிலாக பெருமுதலாளிகளுக்கு பல சலுகைகளை தருகிறார்கள். அவர்களுக்கு ஏக, போக உரிமைகளை வழங்குகிறார்கள். லட்சம் கோடி ரூபாய்களை கடனாக வழங்குகிறார்கள். சில பணமுதலைகள் கடல்வளத்தையும் அபகரிக்கிறார்கள். ஏழைகள் பிரித்தாளப்படும் சூழல் நிலவுகிறது. ஏழை மக்கள் ஒன்றிணைந்து செயல்படுவதுதான் இதற்கு தீர்வு. அடுத்த முறை வரும்போது உங்களுடன் படகில் கடலுக்குள் வந்து நீங்கள் மீன்பிடிப்பதை உடனிருந்து பார்ப்பேன். இவ்வாறு பேசினார்.

* ராகுல் அண்ணா என அழைத்த மாணவிகள்

கலந்துரையாடலில் மாணவிகள் ஒவ்வொருவராக ராகுல் காந்தியை `சார்’ என்று அழைத்து கேள்வி கேட்டனர். ஒருகட்டத்தில் `சார் என்று அழைக்க வேண்டாம். என்னுடைய பெயர் ராகுல். எனவே, ராகுல் என்று அழைத்து கேள்விகளை கேட்கலாம்’ என்றார். அப்போது, மாணவி ஒருவர் உங்களை அண்ணா என்று அழைக்கலாமா? என்று கேட்டார். அதற்கு அவரும் சம்மதம் தெரிவித்தார். அதன்பிறகு, மாணவிகள் `ராகுல் அண்ணா’ என்று அழைத்து கேள்விகளை கேட்டனர்.

Related Stories: