நாட்டின் வரலாற்றில் முதல் முறையாக பெட்ரோல் விலை ரூ.100ஐ தாண்டியது

புதுடெல்லி: நாட்டிலேயே முதல் முறையாக பெட்ரோல் விலை ராஜஸ்தானில் நேற்று ரூ.100 தாண்டியது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வதை காரணம் காட்டி பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் உயர்த்தப்பட்டு வருகிறது. ஆனால், மத்திய, மாநில அரசுகள் வரியை குறைக்காத வரை பெட்ரோல், டீசல் விலை குறைய வாய்ப்பே இல்லை என எண்ணெய் நிறுவன அதிகாரிகள் தெரிவித்து விட்டனர். இருப்பினும், வரியை குறைக்கும் திட்டம் இல்லை என மத்திய அரசு கைவிரித்து விட்டது. இந்நிலையில், நாட்டிலேயே முதல் முறையாக பெட்ரோல் விலை நேற்று ராஜஸ்தான் மாநிலம் ஸ்ரீ கங்கா நகரில் பெட்ரோல் ரூ.100.13க்கு விற்கப்பட்டது.

சில தினங்களுக்கு முன்பே மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், ராஜஸ்தானில் உள்ள சில பகுதிகளில் பவர் பெட்ரோல் ரூ.100ஐ தாண்டி விட்டது. சாதாரண பெட்ரோல் ரூ.100ஐ தாண்டுவது இந்திய வரலாற்றில் இதுவே முதல் முறை.

சென்னையில் நேற்று பெட்ரோல் 23 காசு உயர்ந்து ரூ.91.68க்கும், டீசல் 24 காசு அதிகரித்து ரூ.85.01க்கும் விற்கப்பட்டது. பிற நகரங்களை பொறுத்தவரை டெல்லியில் பெட்ரோல் 25 காசு உயர்ந்து ரூ.89.54, மும்பையில் 25 காசு உயர்ந்து ரூ.96, கொல்கத்தாவில் 24 காசு அதிகரித்து ரூ.90.78க்கு விற்கப்பட்டது. டீசல் டெல்லியில் ரூ.79.95, மும்பையில் ரூ.86.98க்கு, கொல்கத்தாவில் ரூ.83.54க்கு விற்பனை செய்யப்பட்டது. பெட்ரோல் விலை ரூ.100ஐ தாண்டியது மக்களிடையேயும், தொழில்துறையினரிடமும் கடும் அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது. இனியாவது மத்திய, மாநில அரசுகள் அப்பாவி மக்களின் நலன் கருதி வரியை குறைக்க முன்வர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: