வேளாண் சட்டங்களை எதிர்த்து நாடு முழுவதும் விவசாயிகள் இன்று ரயில் மறியல்

புதுடெல்லி: மத்திய வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி டெல்லி எல்லையில் விவசாயிகள் சுமார் 3 மாதமாக போராட்டம் நடத்தி வருகின்றனர். விவசாயிகளுடன் 11 கட்டமாக மத்திய அரசு நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இதைத் தொடர்ந்து விவசாயிகள் போராட்டத்தை தொடர்கின்றனர். கடந்த 6ம் தேதி விவசாயிகள் நாடு தழுவிய சாலை மறியல் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்தனர். இதை ஏற்று 3 மணி நேரம் நாடு முழுவதும் உள்ளூர் விவசாயிகள் பல இடங்களில் சாலை மறியலில் ஈடுபட்டனர். பஞ்சாப், அரியானா, உபியில் மறியல் போராட்டம் தீவிரமாக நடந்தது.

இதைத் தொடர்ந்து, அடுத்ததாக ரயில் மறியல் போராட்டம் நடத்தப் போவதாக சம்யுக்தா கிசான் மோர்சா விவசாய அமைப்பு கடந்த வாரம் அழைப்பு விடுத்தது. இதன்படி, இன்று பகல் 12 மணி முதல் மாலை 4 மணி வரை நாடு தழுவிய 4 மணி நேர ரயில் மறியல் போராட்டம் நடக்க உள்ளது. ரயில்வே பாதுகாப்பு படை பொது இயக்குநர் அருண் குமார் கூறுகையில், ‘‘உளவுத்தகவல்களை தீவிரமாக சேகரித்து வருகிறோம். அதன்படி, பஞ்சாப், அரியானா, உபி, மேற்கு வங்கம் மற்றும் சில பகுதிகளில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. அங்கு 20,000 வீரர்கள் கூடுதல் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். எனவே, மறியலால் பயணிகளுக்கு எந்த அசவுகரியமும் ஏற்படாமல் நடவடிக்கை எடுக்கப்படும் ’’ என்றார்.

* டெல்லி வன்முறையில் வாள் சுழற்றியவர் கைது

குடியரசு தினத்தில் நடந்த டிராக்டர் பேரணியின் போது, செங்கோட்டையில் வன்முறை நிகழ்ந்தது. அந்த சமயத்தில், 2 பெரிய வாள்களை சுழற்றியபடி அரசுக்கும், போலீசாருக்கும் ஒருவர் எதிர்ப்பு தெரிவித்தார். அவர் பெயர் மணிந்தர் சிங். அவரின் இந்த செயல் வன்முறையை தூண்டும்படியாக இருந்தது. எனவே, மணிந்தர் சிங் மீது டெல்லி போலீசார் வழக்கு பதிந்து, தலைமறைவான அவரை தேடி வந்தனர். இந்நிலையில், டெல்லி பிதாம்புரா பகுதியில் பதுங்கியிருந்த அவரை டெல்லி சிறப்பு படை பிரிவு போலீசார் நேற்று கைது செய்தனர்.

Related Stories: