மாஞ்சோலை, மணிமுத்தாறு பகுதிகளில் யானை நடமாட்டம்: விவசாயிகள், பொதுமக்கள் அச்சம்

அம்பை: மணிமுத்தாறு, மாஞ்சோலை பகுதிகளில் யானை நடமாட்டத்தால் விவசாயிகள், பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பக வனப்பகுதிகளில் அமைந்துள்ள மாஞ்சோலை, மணிமுத்தாறு பகுதிகளில் கடந்த சில மாதங்களாக யானை நடமாட்டம் இருந்து வருகிறது. சமீபத்தில் மாஞ்சோலை அரசு பள்ளியின் அருகில் யானை ஒன்று மரத்தை முட்டி சாய்க்கும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வைரலாகி வருகிறது.

மேலும் ஆலடியூர்,  மணிமுத்தாறு மேலகேம்ப் பகுதிகளிலும் ஆண் யானை ஒன்று வேலிகளை சாய்த்து தோட்டங்களுக்குள் புகுந்து விவசாய பயிர்களையும், வாழை, பனை மரங்களையும் சேதப்படுத்தி சென்றது. இதுகுறித்து மணிமுத்தாறு அருகில் உள்ள தோட்ட உரிமையாளர்கள் முத்துகணேஷ், மோகன்ராம், சந்திரசேகர், ஜனார்த்தன நாயர் ஆகியோர் கூறும்போது, முரட்டு தோற்றம் கொண்ட நீண்ட தந்தங்களுடன் ஆண் யானை ஒன்று தோட்டங்களில் புகுந்து பயிர்களையும், மரங்களையும் சாய்த்து நாசம் செய்து வருகிறது. வனத்துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து யானையை காட்டுக்குள் விரட்ட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

வனத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், யானை காட்டுக்குள் இருந்து வழி தவறி வந்திருக்கலாம். இருப்பினும் வனத்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு கண்காணித்து வருகிறோம். வன விலங்குகளை மக்கள் துன்புறுத்தாதவரை  பிறரை வனவிலங்குகள் துன்புறுத்தாது. விவசாய பயிர்கள் தோட்டங்களில் ஏற்படும் சேதங்கள் குறித்து புகார் தெரிவித்தால் வனத்துறை ஆய்வு செய்து உரிய இழப்பீடு கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

Related Stories: