தாளவாடி நகர் கல்குவாரியில் சிறுத்தை நடமாட்டம்-வனத்துறையினர் கூண்டு வைத்து கண்காணிப்பு

சத்தியமங்கலம்:  தாளவாடி நகர் கல்குவாரியில் சிறுத்தை நடமாட்டம் உள்ளதால், வனத்துறையினர் கூண்டு வைத்து கண்காணித்து வருகின்றனர்.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை அடுத்துள்ள தாளவாடி மலைப்பகுதியில் 50க்கும்  மேற்பட்ட மலை கிராமங்கள் உள்ளன. வனப்பகுதியை ஒட்டியுள்ள இந்த மலை  கிராமங்களில் இரவு நேரத்தில் சிறுத்தை உள்ளிட்ட வன விலங்குகள் புகுந்து  விவசாயிகள் வளர்க்கும் ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளை அடித்துக்கொல்வது  தொடர்கதையாக உள்ளது.

மேலும், தாளவாடி நகர் பகுதியை ஒட்டியுள்ள ஓசூர்,  தொட்டகாஜனூர், மெட்டல்வாடி, சூசையபுரம், பீமராஜ் நகர் உள்ளிட்ட பகுதிகளில்  உள்ள கிரானைட் கல் குவாரி பகுதிகளில் சிறுத்தைகள் பகல் நேரத்தில் பதுங்கிக்  கொண்டு இரவு நேரத்தில் குவாரியை விட்டு வெளியேறி விவசாய தோட்டங்களில்  நடமாடுகின்றன.

இந்நிலையில், தாளவாடி நகர் பகுதியை ஒட்டியுள்ள அரசு  போக்குவரத்து கழக பணிமனை பகுதியில் குடியிருப்பை ஒட்டி அமைந்துள்ள கிரானைட்  கல்குவாரி கடந்த 10 ஆண்டுகளாக செயல்படாமல் உள்ளது. இந்த செயல்படாத  கல்குவாரியில் சிறுத்தைகள் நடமாட்டம் உள்ளதோடு குட்டிகள் போட்டுள்ளதாகவும்  கூறப்படுகிறது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு இப்பகுதியில் உள்ள விவசாயி  கந்தசாமி என்பவரது தோட்டத்தில் நுழைந்த சிறுத்தை பசு மாட்டை அடித்துக்  கொன்றது. இதனால், தாளவாடி நகர் பகுதி பொதுமக்கள் மிகுந்த அச்சமடைந்துள்ளனர். நகர்ப்பகுதியை ஒட்டி சிறுத்தை நடமாடுவதாக அப்பகுதி மக்கள் அளித்த புகாரின்பேரில், கல்குவாரி பகுதியில் வனத்துறையினர் சிறுத்தையை பிடிப்பதற்காக  கூண்டு வைத்தனர். ஆனால், சிறுத்தை கூண்டில் சிக்காமல் போக்கு காட்டி  வருகிறது.

செயல்படாத கல்குவாரிகள் உள்ளதால், அப்பகுதியில் சிறுத்தைகள் தங்கி  விடுவதாகவும், இந்த செயல்படாத கல் குவாரிகளை சுத்தம் செய்து  சிறுத்தைகள் தங்காத வண்ணம் பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ள மாவட்ட  நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை  விடுத்துள்ளனர்.

Related Stories: