மொரிசியஸ் தீவில் பணம் பதுக்கியதாக முதல்வர் மீது குற்றச்சாட்டு: விசாரணை நடத்த பிரதமர் அனுமதிக்க வேண்டும்: எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா வலியுறுத்தல்

பெங்களூரு: முதல்வர் எடியூரப்பா, மொரிசியஸ் தீவில் பணத்தை  மறைத்து வைத்துள்ளார் என்ற  பாஜ எம்எல்ஏவின் குற்றச்சாட்டு தொடர்பாக உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடத்துவதற்கு பிரதமர் நரேந்திர மோடி உத்தரவிடவேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா வலியுறுத்தினார். கர்நாடக மாநில எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா டெல்லி சென்று  காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியை நேற்று சந்தித்து பேசினார். ராகுல்காந்தியுடன் நடந்த சந்திப்பிற்கு பிறகு நிருபர்களிடம் சித்தராமையா கூறியதாவது: கடந்த 2020, ஜனவரி மாதம் டெல்லி வந்திருந்தேன். அதன்பிறகு டெல்லி வர முடியவில்லை. கொரோனா உள்ளிட்ட பாதிப்பின் காரணமாக ராகுல்காந்தி உள்ளிட்ட தலைவர்களை சந்தித்து பேசுவதற்கான வாய்ப்பு அமையவில்லை.இதையொட்டி கடந்த வாரம் ராகுல்காந்தியிடம் டெல்லி வருவதாக கூறினேன். ராகுல்காந்தி அனுமதி கிடைத்த நிலையில் அவரை சந்தித்து நலம் விசாரித்தேன். அத்துடன் மாநில அரசியல் தொடர்பாகவும் சிறிது நேரம் ஆலோசனை நடத்தினோம்.

இதைத்தொடர்ந்து நிருபர்கள் கேள்விகளுக்கு பதில் அளித்து சித்தராமையா கூறியதாவது: கர்நாடக மாநில முதல்வர் எடியூரப்பா மற்றும் அவரின் குடும்பத்தினர் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மொரிசியஸ் தீவில் ஊழல் பணத்தை மறைத்து வைப்பதற்காகவே தனி விமானத்தில் சென்றனர் என பாஜ கட்சி எம்எல்ஏ பசனகவுடா பாட்டீல் யத்னால் கூறியுள்ளார். காங்கிரஸ் உள்ளிட்ட வேறு கட்சி தலைவர்கள் கூறினால் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக பொய் கூறுகின்றனர் என நினைக்கலாம். பாஜவின் தற்போதைய எம்எல்ஏவும்  மாஜி மத்திய அமைச்சருமான பசவனவுடா பாட்டீல் எத்னால் இவ்வாறு கூறியுள்ள நிலையில் அதை எளிதாக எடுத்துக்கொள்ள முடியாது. மத்தியிலும் மாநிலத்திலும் பாஜ ஆட்சி நடைபெறும் நிலையில் முதல்வர் எடியூரப்பா மீது அந்த கட்சி எம்எல்ஏ புகார் கூறியுள்ளார் எனவே பிரதமர் நரேந்திர மோடி, இவ்விஷயத்தில் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

முதல்வர் எடியூரப்பா மீது நேரடியாக புகார் எழுந்துள்ளதால் உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடத்துவதற்கு பிரதமர் நரேந்திர மோடி உத்தரவிடவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். குருபர் சமுதாயத்திற்கு  2ஏ இட ஒதுக்கீடு கேட்கப்படும் பிரச்னையில் போராட்டம், ஊர்வலம் நடத்துவது அவசியம் அற்றது என்பது என்னுடைய கருத் தாகும். இடஒதக்கீடு கேட்பது அனைவரின் உரிமை அதே நேரம் அரசியல் அமைப்பு விதிகள் 15,16 மற்றும் 340 ன்படி யார் யாருக்கு இடஒதுக்கீடு அவசியம் என்பது தெளிவாக வரையறுக்கப்பட்டுள்ளது. பொருளாதாரத்தின் பின்தங்கியுள்ள சமுதாயத்திற்கு இடஒதுக்கீடு கிடைக்கவேண்டும் என்பதில் தவறு கிடையாது. அதே நேரம் இடஒதுக்கீடு வழங்க சிபாரிசு செய்யவேண்டிய பொறுப்பு மாநில அரசுக்கு உள்ளது. கோவில் கட்டுவதற்கு பணம் வழங்கப்படவில்லை என்றால் அந்தவீட்டில் குறியிடப்படுகிறது என மாஜி முதல்வர் குமாரசாமி கூறியுள்ளார்.

என்னுடைய வீட்டிற்கு நிதி கேட்க வந்தபோது அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கு நிதி தரவில்லை. அதே நேரம் கர்நாடகாவில் ராமர் கோவில் கட்டினால் நிதி அளிப்பேன் என கூறிவிட்டேன். பிபிஎல் ரேசன் கார்டு விஷயத்தில் அமைச்சர் உமேஷ் கத்தி எவ்வித முன்யோசனையும் இன்றி பேட்டி அளித்துள்ளார். டி.வி,. மோட்டார் சைக்கிள் வைத்திருக்கும் நபர்கள் பணக்காரர் என்பது தவறாகும். உணவு பாதுகாப்பு சட்டத்தின்கீழ் அனைவருக்கும் உணவு கிடைக்கவேண்டும் என்பதற்காக ரேசன் கார்டு மூலமாக உணவு தானியங்கள் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.இதில் முறைகேடு நடந்தால் கண்டிப்பாக தடுக்கவேண்டும். கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பின் போது பிரதமர் நிவாரண நிதிக்கு எவ்வளவு பணம் வந்துள்ளது? என பல முறை கேட்டு பார்த்துவிட்டோம். ஆனால், இதுவரை அதுபற்றி எதுவும் பிரதமர் வாய் திறக்கவில்லை. இதுதான் பாஜவின் உண்மை நிலை ஆகும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: