தெப்பக்காடு வனப்பகுதியில் காயத்துடன் மீட்கப்பட்ட குட்டி யானை உயிரிழந்தது

ஊட்டி: தெப்பக்காடு வனப்பகுதியில் தாயால் கைவிடப்பட்ட நிலையில் நெற்றியில் பலத்த காயத்துடன் மீட்கப்பட்ட குட்டி யானை உயிரிழந்தது. நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகம், தெப்பக்காடு வனச்சரகத்திற்குட்பட்ட வனப்பகுதியில் நேற்று காலை வனத்துறை ஊழியர்கள் வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது தாய் யானையால் கைவிடப்பட்ட நிலையில் குட்டியானை ஒன்று சுற்றி திரிவதை பார்த்து அதனை மீட்டனர். தொடர்ந்து உயரதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். வனத்துறை அதிகாரிகள் மற்றும் வன கால்நடை மருத்துவர் ராஜேஷ்குமார் ஆகியோர் விரைந்து சென்று யானை குட்டியை பார்வையிட்டனர். அப்போது அது பிறந்து 3 மாதமே ஆன ஆண் யானைக்குட்டி என்பது தெரிய வந்தது. நீரிழப்பு ஏற்பட்டு மிகவும் சோர்வுடன் இருந்ததும், அதன் நெற்றியில் பெரிய அளவில் காயம் ஏற்பட்டு இருந்ததும் தெரியவந்தது.

உடனடியாக நீரிழப்பை சரி செய்யும் வகையில் பால் உள்ளிட்டவை வழங்கப்பட்டன. நெற்றியில் ஏற்பட்டிருந்த காயத்திற்கு சிகிச்சை அளிக்கப்பட்டு மருந்து போடப்பட்டது. குட்டியை அதன் தாயுடன் சேர்க்கவும், இல்லாத பட்சத்தில் தெப்பக்காடு முகாமில் வைத்து பராமரிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என கள இயக்குநர் கவுசல் தெரிவித்திருந்தார். ஆனால் நெற்றியில் ஏற்பட்டிருந்த பலமான காயம் மற்றும் நீரிழப்பு உள்ளிட்ட பாதிப்புகளால் சிகிச்சை பலனின்றி அந்த குட்டி யானை உயிரிழந்தது. தாயை பிரிந்து வனப்பகுதியில் நடமாடிய குட்டி யானைக்கு மற்ற விலங்குகளுடனான மோதலில் காயம் ஏற்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. அதுதான் காயத்துக்கு காரணமா? அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்பது தொடர்பான விசாரணை நடக்கிறது.

Related Stories: