144 ஆண்டுகளை கடந்த கும்பகோணம் ரயில் நிலையம்: பணியாளர்கள் கவுரவிப்பு

கும்பகோணம்: கும்பகோணம் ரயில் நிலையம் ஆரம்பிக்கப்பட்டு, 144 ஆண்டுகளை கடந்து, நேற்று 145வது ஆண்டை துவங்குவதால் பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கியும், ரயில் நிலைய பணியாளர்களை கவுரவித்தும் ரயில் உபயோகிப்பாளர் சங்கத்தினர் கொண்டாடினர். இந்நிகழ்ச்சிக்கு சங்க துணை தலைவர் ஜமீல் தலைமை வகித்தார். ரயில் நிலைய மேலாளர் முருகானந்தம் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் சங்க செயலாளர் கிரி பேசும்போது, கும்பகோணம் ரயில் நிலையம் வழியாக 15.2.1877 அன்று, முதல் ரயில் போக்குவரத்து தொடங்கியது. அதன் 145வது ஆண்டு துவங்கியுள்ளது.

ஐ.எஸ்.ஓ தரசான்று பெற்றுள்ள கும்பகோணம் ரயில் நிலையம், தூய்மைபணி, சிறந்த முன்பதிவு மையம் போன்றவற்றுக்கு கடந்த காலங்களில் இந்திய அளவில் விருதுகள் பெற்றுள்ளது. ஆண்டு டிக்கெட் வருமானமாக ரூ.23 கோடி ஈட்டி திருச்சி கோட்டத்தில் அதிக டிக்கெட் வருவாய் ஈட்டுவதில் நான்காம் இடத்தில் கும்பகோணம் உள்ளது என்றார். நிகழ்ச்சியில் ஓய்வு பெற்ற நிலைய கண்காணிப்பாளர் கே.ஆர்.ஆராவமுதன் கவுரவிக்கப்பட்டார். இதில், பாபநாசம் ரயில் பயணிகள் சங்க செயலாளர் சரவணன், கும்பகோணம் அனைத்து தொழில் வணிக சங்கங்களின் கூட்டமைப்பு செயலாளர் சத்தியநாராயணன், ரயில்வே வணிக ஆய்வாளர் தங்கமோகன், ரயில்வே பாதுகாப்பு படை உதவி ஆய்வாளர் மணிமாறன், ரயில்வே காவல்துறை உதவி ஆய்வாளர் சிவராமன், சுகாதார ஆய்வாளர் பாலசுப்ரமணியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Related Stories: