மீனாட்சிபுரத்தில் சிதையும் தொல்லியல் ஓவியங்கள்: பாதுகாக்க பேராசிரியர்கள் கோரிக்கை

ராஜபாளையம்: ராஜபாளையம் ராஜூக்கள் கல்லூரி முதுகலை மற்றும் வரலாற்று ஆய்வு மையம் முதலாம் மற்றும் இரண்டாம் ஆண்டு முதுகலை வரலாற்றுத்துறை மாணவ, மாணவிகள் மற்றும் வரலாற்றுத் துறைப் பேராசிரியர்கள் ராஜபாளையம் அருகே உள்ள மீனாட்சிபுரத்தில் தொல்லியல் ஆய்வை மேற்கொண்டனர். வரலாற்றுத்துறை தலைவர் வெங்கட்ராமன் ஆலோசனையின்படி இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. பேராசிரியர்கள் ஜெகந்நாத், கந்தசாமி மற்றும் ஸ்ரீலட்சுமி ஆகியோர் மாணவர்களை வழி நடத்திச் சென்றனர். மீனாட்சிபுரத்தில் அமைந்துள்ள குன்றக்குடி என்று அழைக்கப்படும் ஆமை மலைப்பகுதியில் 5000 ஆண்டுகளுக்கும் முற்பட்ட பழமையான பாறை ஓவியங்களை அவர்கள் ஆய்வு செய்தனர்.

கற்கால மனிதர்களின் வாழ்வியலை வெளிப்படுத்தும் வகையில் வெள்ளை நிறத்தில் வரையப்பட்ட பாறை ஓவியங்கள் மூன்று குகைகளில் காணப்படுகிறது. வீரர்கள் பலர் விலங்குகளை ஆயுதங்களால் தாக்குவது போன்ற காட்சி வரையப்பட்டுள்ளது. சூரியன், புலி, யானை போன்ற உருவங்கள் மற்றும் வேட்டைக்காட்சியில் குழுத் தலைவன் கிரீடம் அணிந்துள்ளது ஓவியத்தில் காட்டப்பட்டுள்ளது. வெண்ணை உருண்டை கல் ஒன்று மலை உச்சியில் நிற்பது வியக்கும் வகையில் உள்ளது. தற்போது இப்பகுதிக்கு செல்லும் பொழுது வழிப்பாதை இல்லாமல் முட்புதர்களால் பாதுகாப்பின்றி காணப்படுகின்றது. அதோடு பழங்கால ஓவியம் சிதைந்து வருவது மிகவும் வேதனை அளிப்பதாகவும், இந்த பகுதியை தொல்லியல்துறை பராமரித்து தொல்லியல் இடமாக அறிவிக்கப்பட வேண்டும் என்றும் பேராசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: