சமூக சேவகர்கள், பத்திரிகையாளர்களை குறிவைத்து சித்ரவதை செய்வது வேதனை அளிக்கிறது!: திஷா ரவி கைதுக்கு மம்தா பானர்ஜி கண்டனம்

கொல்கத்தா: பெங்களூரு மாணவி திஷா ரவி கைது செய்யப்பட்டதற்கு மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி கண்டனம் தெரிவித்துள்ளார். சில தினங்களுக்கு முன்னர், பெங்களூருவை சேர்ந்த திஷா ரவி என்ற மாணவி, கிரெட்டா தன்பெர்க்கின் வாசகங்களை ஒரு போராட்ட குழு சார்பில் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டிருந்தார். இதையடுத்து, பெங்களூரு வந்த டெல்லி காவல்துறையினர் அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியதில் 5 நாள் போலீஸ் காவல் வழங்கப்பட்டுள்ளது. திஷா ரவி கைது செய்யப்பட்டதற்கு தலைவர்கள் பலர் கண்டனம் தெரிவித்தனர். அந்தவகையில், மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

கொல்கத்தாவில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், சமூக சேவகர்கள், பத்திரிகையாளர்களை குறிவைத்து சித்ரவதை செய்யப்படுவதாக வேதனை தெரிவித்தார். பாஜக-வை சார்ந்த ஐ.டி.பிரிவினரை முதலில் கைது செய்ய வேண்டும் என்று மம்தா பானர்ஜி கேட்டுக்கொண்டார். அவர்களே போலி செய்திகளை சமூக வலைத்தளங்களில் பரப்புவதாக அவர் சாடினார். மேலும், அரசாங்க கொள்கைகளுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்வோர்களை கைது செய்வது, ஏற்கத்தக்கதில்லை என்றும் மம்தா குறிப்பிட்டார்.

முன்னதாக மா கேன்டீன் என்ற 5 ரூபாய் மதிய உணவு திட்டத்தை தொடங்கி வைத்து அவர் பேசினார். சுயஉதவி குழுக்கள் மூலம் மாநிலம் முழுவதும் நடத்தப்படும் இந்த திட்டத்தில் ஒரு சாப்பாடு தயாரிக்க ஆகும் 20 ரூபாயில் மாநில அரசு 15 ரூபாய் மானியமாக செலுத்தும் என்றும் மம்தா கூறினார். பகல் 1 மணி முதல் 3 மணி வரை உணவு கிடைக்க ஏற்பாடு செய்யப்படும் என்றும் அவர் உறுதியளித்தார். அதே நேரத்தில் தேர்தல் நெருங்கும் நிலையில் ஆதாய நோக்கில் உணவு திட்டம் தொடங்கப்பட்டதாக பாஜக கூறியுள்ளது. இதன் மூலம் மக்கள் வறுமையில் இருப்பது புலப்படுவதாக விமர்சித்துள்ளது.

Related Stories: