அசத்தல்... அபாரம் ...அமர்க்களம்...அட்டகாசம்...அற்புதம்...அஷ்வின்!

டெஸ்ட் போட்டிகளுக்கான ஐசிசி ஆல்ரவுண்டர்கள் தரவரிசை பட்டியலில் டாப் 10ல் உள்ள இந்திய சுழற்பந்து நட்சத்திரம் ஆர்.அஷ்வின் (6வது ரேங்க்), அதற்கு தான் முழு தகுதி வாய்ந்தவர் என்பதை மீண்டும் ஒரு முறை அழுத்தம் திருத்தமாக நிரூபித்துள்ளார். சென்னையில் நடக்கும் 2வது டெஸ்டின் 2ம் நாள் ஆட்டத்தில், தனது அற்புதமான பந்துவீச்சால் 5 இங்கிலாந்து வீரர்களை வெளியேற்றி அசத்திய அவர், நேற்று நடந்த 3வது நாள் ஆட்டத்தில் அபாரமாக விளையாடி சதம் அடித்து அமர்க்களப்படுத்தினார்.

* டெஸ்ட் போட்டிகளில் இது அஷ்வின் விளாசும் 5வது சதமாகும். சொந்த ஊரான சென்னையில் அவர் அடித்த முதல் சதம்.

* ஒரே டெஸ்ட் போட்டியில் 5 விக்கெட் மற்றும் சதம் விளாசும் அரிய சாதனையை அஷ்வின் 3வது முறையாக நிகழ்த்தியுள்ளார் (76 டெஸ்ட்). இந்த வரிசையில் இங்கிலாந்து ஆல் ரவுண்டர் இயான் போதம் (5 முறை, 102 டெஸ்ட்) முதலிடத்திலும், அஷ்வின் 2வது இடத்திலும் உள்ளனர். கேரி சோபர்ஸ், முஷ்டாக் முகமது, ஜாக் காலிஸ், ஷாகிப் அல் ஹசன் ஆகியோர் (தலா 2 முறை) அடுத்த இடத்தை பகிர்ந்துகொண்டுள்ளனர். டெஸ்ட் வரலாற்றில் இது 33வது நிகழ்வாகும்.

* ஒரே டெஸ்டில் 10 விக்கெட் வீழ்த்துவது மற்றும் சதம் விளாசும் சாதனையை போதம், இம்ரான் கான், ஷாகிப் ஹசன் தலா ஒரு முறை நிகழ்த்தியுள்ளனர். இங்கிலாந்து அணியின் 2வது இன்னிங்சிலும் அஷ்வின் 5 விக்கெட் வீழ்த்தினால் இந்த சாதனையை சமன் செய்யலாம்.

* இங்கிலாந்து அணிக்கு எதிராக அஷ்வினின் ரன் குவிப்பு சராசரி 39.16 ஆகவும், வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக 50.18 ஆகவும் உள்ளது. மற்ற அணிகளுக்கு எதிரான சராசரி 25.00க்கும் குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: