ரிஷிவந்தியம், பகண்டை கூட்ரோடு பகுதியில் வீடுகளில் புகுந்து பொதுமக்களை அச்சுறுத்தி வரும் குரங்குகள்-அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கோரிக்கை

ரிஷிவந்தியம் : ரிஷிவந்தியம், பகண்டை கூட்டுசாலை நகர மக்களுக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்து வரும் நாய், குரங்குகளை பிடிக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.   ரிஷிவந்தியம், பகண்டைகூட்டுசாலை நகரில் பஸ் நிலையம், அரசு அலுவலகங்கள், பள்ளிகள், குடியிருப்பு உள்ளிட்ட பகுதிகளில் நாய், குரங்குகள் தினசரி நூற்றுக்கணக்கில் சுற்றித் திரிகின்றன.

உணவு தேடி அலையும் குரங்குகள் வீடுகள், ஓட்டல்கள், மளிகை கடைகளுக்குள் புகுந்து அங்குள்ள உணவு பொருட்களை வாரி இறைத்து சேதம் செய்கின்றன. வீட்டிலுள்ள துணிகளை கிழித்து நாசம் செய்கின்றன. மேலும், பஸ் நிலையங்களில் பயணிகளின் உடமைகளை பிடுங்கிக் கொள்வதுடன், அவர்களை அச்சுறுத்துகின்றன.

 அதேபோல் தெருக்களில் சுற்றித்திரியும் நாய்கள் சாலைகளில் குவியும் குப்பைகளை கிளறி சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தி வருகின்றன. மேலும், தெருவில் செல்லும் குழந்தைகள், பெரியவர்கள், வாகன ஓட்டிகளை துரத்திச் சென்று கடித்து குதறுகின்றன. இதனால் நகரில் வசிக்கும் மக்கள் தினசரி பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றனர்.

நகரில் சுற்றித் திரியும் நாய், குரங்குகளை பிடிக்க வேண்டுமென வியாபாரிகள், குடியிருப்போர் சங்கத்தினர், தன்னார்வ தொண்டு நிறுவனத்தினர் பல நாட்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால் இதுவரை எவ்வித நடவடிக்கையும் இல்லை. இதனால் நாய், குரங்கு தொல்லைகளால் நகர மக்கள் அவதியடைவது தொடர்கிறது.

தஞ்சாவூர் சம்பவம் நிகழும் அபாயம்  

தஞ்சாவூர் பகுதியில் வனத்துறை அலட்சியத்தால், வீட்டில் தூங்கி கொண்டிருந்த பிறந்து 7நாட்களான இரட்டை குழந்தைகளை குரங்குகள் தூக்கி சென்றது. இதில், குளத்தில் வீசியதில் ஒரு குழந்தை இறந்தது. மற்றொரு குழந்தையை வீட்டு மேற்கூரையில், போட்டதால் உயிர் தப்பியது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் போல் ரிஷிவந்தியம் பகுதியில் ஏதேனும் அசம்பாவிதம் ஏற்படும் முன் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குரங்குகளை பிடிக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூகஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: