வாட்ஸ்அப்-பின் புதிய பிரைவசி கொள்கையை தடைவிதிக்க கோரிய மனு!: வாட்ஸ்அப், ஃபேஸ்புக் நிறுவனம் பதிலளிக்க உச்சநீதிமன்றம் நோட்டீஸ்..!!

டெல்லி: புதிய பிரைவசி கொள்கையை செயல்படுத்த தடைவிதிக்க கோரிய மனு மீது பதில் அளிக்க மத்திய அரசு, வாட்ஸ்அப், ஃபேஸ்புக் நிறுவனத்துக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருக்கிறது. வாட்ஸ்அப் நிறுவனம் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக தனது பிரைவசி கொள்கையை மாற்றம் செய்வதாக அறிவித்திருந்தது. இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்தது. குறிப்பாக இந்தியா போன்ற அதிக பயனாளர்களை கொண்ட நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. புதிய கொள்கையின் மூலம் தனிநபரின் தகவல்கள் பெரிய அளவில் பாதிப்பிற்குள்ளாகும் என தகவல் வெளியாகியிருந்தது.

மத்திய அரசு வாட்ஸ்அப் நிறுவனத்திடம் இது சம்பந்தமாக தகவல்களையும், விளக்கங்களையும் கேட்டு பெறலாம் என்ற அறிவித்திருந்ததையடுத்து, உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் வாட்ஸ்அப்பின் புதிய பிரைவசி கொள்கைகளை செயல்படுத்த தடைவிதிக்க கோரி டெல்லியை சேர்ந்த கர்மான்ய சிங் ஹரீன் என்பவர் உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றினை தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்குகள் இன்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அச்சமயம், தனிப்பட்ட தகவல்களை மக்கள் பெரிதாக கருதுகின்றனர் என கருத்து தெரிவித்த நீதிபதிகள், புதிய பிரைவசி கொள்கையை செயல்படுத்த தடைவிதிக்க கோரிய மனு மீது பதில் அளிக்க வாட்ஸ்அப் நிறுவனத்துக்கு உத்தரவிட்டனர். மேலும் வாட்ஸ்அப்பை நிர்வகிக்கும் ஃபேஸ்புக் நிறுவனமும் பதில் அளிக்குமாறு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

Related Stories: