சென்னை வண்ணாரப்பேட்டை-விம்கோ நகர் இடையே மெட்ரோ ரயில் சேவை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்: ரூ.3,640 கோடியில் புதிய திட்டங்களுக்கு அடிக்கல்

சென்னை: சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வண்ணாரப்பேட்டை - விம்கோ நகர் இடையிலான மெட்ரோ ரயில் சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். மேலும் 3 ஆயிரம் கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். தமிழகத்தில் புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுவதற்காகவும், முடிவுற்ற பணிகளை தொடங்கி வைப்பதற்காகவும் பிரதமர் மோடி நேற்று காலை சென்னை வந்தார். காலை 7.50 மணிக்கு இந்திய விமான படைக்கு சொந்தமான தனி விமானத்தில் டெல்லியில் இருந்து புறப்பட்டு, 10.35 மணிக்கு சென்னை பழைய விமான நிலையம் வந்தடைந்தார். அங்கு அவரை தமிழக அரசின் தலைமை செயலாளர் ராஜீவ் ரஞ்சன் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.

காலை 10.40 மணிக்கு தனி ஹெலிகாப்டரில் புறப்பட்டு, 11 மணிக்கு சென்னை ஐஎன்எஸ் அடையாறு விமானபடை தளத்துக்கு வந்தார். அங்கு அவரை கவர்னர் பன்வாரிலால் புரோகித், முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் வரவேற்றனர். அங்கிருந்து காரில் புறப்பட்டு, விழா நடைபெறும் சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கத்துக்கு வந்தார். அவர் பயணம் செய்த பாதையான தலைமை செயலகம், ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனை, சென்ட்ரல் ரயில் நிலையம், பெரியமேடு ஆகிய 5 இடங்களில் மேடை அமைக்கப்பட்டு மேளம், நடனத்துடன் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

காரில் பிரதமர் வரும் சாலை முழுவதும் அதிமுக, பாஜ தொண்டர்கள் திரண்டு உற்சாகமாக வரவேற்பு அளித்தனர். சாலையோரங்களில் நின்றிருந்த கட்சியினர், பொதுமக்களை பார்த்து கை அசைத்தபடி பிரதமர் மோடி சென்றார். 11.30 மணிக்கு விழா மேடைக்கு வந்த பிரதமர் மோடி விழா மேடையில் வைக்கப்பட்டிருந்த எம்ஜிஆர், ஜெயலலிதாவின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து அவருக்கு முதல்வர் எடப்பாடி பொன்னாடை போர்த்தி, கிருஷ்ணர் சிலையை நினைவு பரிசாக அளித்தார். முன்னதாக உள்விளையாட்டரங்கில் ஆவடி பீரங்கி தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்ட அர்ஜூன் எம்பிடி எம்கே 1ஏ ரக ராணுவ கவச வாகன அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். அர்ஜூன் டாங்கை நாட்டுக்கு அர்ப்பணித்த பிரதமர், ராணுவ வீரர்களிடம் உரையாடியதோடு கவச வாகனம் முன்பு வீரர்களுடன் குழு புகைப்படம் எடுத்துக்கொண்டார்.

பின்னர் விழா மேடையில் இருந்த படி ரூ.3770 கோடியில் சென்னை, வண்ணாரப்பேட்டை - விம்கோ நகர் இடையே மெட்ரோ ரயில் சேவை திட்டத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக மோடி கொடி அசைத்து தொடங்கி வைத்தார். மேலும், ரூ.293.4 கோடியில் சென்னை கடற்கரை அத்திப்பட்டு 4 வது வழித்தடம் மற்றும் விழுப்புரம், தஞ்சாவூர், திருவாரூர் ஒரு வழிப்பாதை மின்மயமாக்குதல் திட்டத்தையும் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். ஆவடி பீரங்கி தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்ட எம்.பி.டி. அர்ஜுன் எம்.கே.1ஏ, பீரங்கி கவச வாகனத்தை ராணுவத்திடம் பிரதமர் மோடி ஒப்படைத்தார்.

மேலும், ரூ.2,640 கோடியில் கல்லணை கால்வாய் புதுப்பித்தல் மற்றும் நவீனப்படுத்தும் திட்டம், ரூ.1000 கோடியில் சென்னை இந்திய தொழில்நுட்ப கழக டிஸ்கவரி வளாகம் ஆகியவற்றிற்கும் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். தொடர்ந்து பிரதமர் மோடி சிறப்புரையாற்றினார். தன்னுடைய பேச்சை முடித்துக்கொண்ட பிறகு மேடையிலிருந்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் ஆகியோரது கரங்களை ஒன்றாகப் பிடித்து உயர்த்தினார்.

முன்னதாக விழாவில் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் வரவேற்புரை வழங்கினார். முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையேற்று உரையாற்றினார்.

இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர், தலைமை செயலாளர், அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து ஐஎன்எஸ் அடையாறு விமானப்படை தளம் சென்ற மோடியை, பங்காரு அடிகளார், அப்பல்லோ குழுமத் தலைவர் பிரதாப் சி ரெட்டி மற்றும் ப்ரீதா ரெட்டி ஆகியோர் சந்தித்து பேசினர். இதையடுத்து சென்னை விமான நிலையம் சென்ற அவர், தனி விமானத்தில் கேரள மாநிலம் கொச்சி புறப்பட்டு சென்றார்.

பிரதமர் மோடி வருகையையொட்டி சென்னை பழைய விமான நிலையத்தில் இருந்து நேரு விளையாட்டு அரங்கம் முதல் 4 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதற்காக சுமார் 10 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

* கருப்பு மாஸ்க் அணிய தடை

பிரதமர் மோடி நிகழ்ச்சியில் கலந்து கொள்ள நேரு உள்விளையாட்டு அரங்கிற்கு வந்த பொதுமக்கள் கடும் சோதனைக்கு பிறகே உள்ளே அனுமதிக்கப்பட்டனர். அவர்கள் கருப்பு கலர் மாஸ்க் அணிந்து இருந்ததால் போலீசார் அகற்ற அறிவுறுத்தினார்கள். இதை தொடர்ந்து போலீசார் சார்பில் மாஸ்க் தரப்பட்டன. அதன்பிறகு அவர்கள் உள்ளே செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

* நண்பர்களே

பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்து பிரதமர் மோடி வணக்கம் தமிழ்நாடு, வணக்கம் சென்னை என்று தமிழில் உரையை தொடங்கினார். தனது உரையில் அடிக்கடி நண்பர்களே என்று தெரிவித்தார். இவ்வாறு மொத்தம் 13 முறை மோடி நண்பர்களே என்று கூறினார்.

* முதல் வரிசையில் கூட்டணி கட்சிகள்

மெட்ரோ சேவை உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இந்த விழாவில் கூட்டணி கட்சிகளான பாமக, தமாகா, தேமுதிக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர். இவர்களுக்கு முதல் வரிசையில் இருக்கைகள் போடப்பட்டிருந்தது.

* இசைக்கப்படாத தேசிய கீதம்

பிரதமர் கலந்து கொண்ட நிகழ்ச்சியின் தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்டது. ஆனால் இறுதியில் தேசியக் கீதம் இசைக்கப்படவில்லை. இதனால் தேசிய கீதம் இசைக்காமல் நிகழ்ச்சி முடிவுற்றது.

* கேரளாவில் ரூ.6,100 கோடி வளர்ச்சி திட்டம் பணிகள் துவக்கம்

கொச்சிக்கு வந்த பிரதமர் மோடி, அங்கிருந்து ஹெலிகாப்டரில் விழா மேடைக்கு வந்தார். அதில், கொச்சியில் ₹6 ஆயிரம் கோடியில் அமைக்கப்பட்டுள்ள பாரத் பெட்ரோல் கெமிக்கல் நிறுவன நவீன எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தையும், வெலிங்டன் தீவில் அமைக்கப்பட்டுள்ள படகு போக்குவரத்தையும் நாட்டுக்கு அர்ப்பணித்து வைத்தார். மேலு, கொச்சி துறைமுகம், கப்பல் கட்டும் தளம் உள்பட பொதுத்துறை நிறுவனங்களில் மத்திய அரசின் வளர்ச்சி திட்டங்களை தொடங்கி வைத்தார். பின்னர் அவர் பேசுகையில், ‘‘இந்தியாவில் 130 கோடி மக்களும் இணைந்து நின்றதால்தான் கொரோனாவை ஒழிக்க முடிந்தது. கொரோனா காலத்தில் வெளிநாடுகளில் சிக்கி இருந்த இந்தியர்களை பத்திரமாக இந்தியாவுக்கு கொண்டு வரவும் முடிந்தது. அதில் பெரும்பாலானோர் மலையாளிகள். இந்தியாவில் சுற்றுலா துறை கடந்த 5 வருடங்களாக முன்னேற்ற பாதையில் சென்று கொண்டு இருக்கிறது,’’ என்றார். விழாவில், கவர்னர் ஆரிப் முகமது கான், முதல்வர் பினராய் விஜயன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: