விருதுநகரில் புதர் மண்டி கிடக்கும் நகராட்சி பூங்கா: பராமரிக்க கோரிக்கை

விருதுநகர்: விருதுநகரில் புதர் மண்டி கிடக்கும் நகராட்சி பூங்காவை முறையாக பராமரிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

விருதுநகர் கல்லூரி சாலையில் விஎன்பிஆர் நகராட்சி பூங்கா அரைகுறை செயல்பாட்டில் உள்ளது. நகராட்சி பூங்காவின் முன்பகுதி மேல்நிலை மற்றும் தரைமட்ட தொட்டிகள், நடுப்பகுதியில் நடைபாதையுடன் கூடிய பூங்கா, நடுவில் சங்கரலிங்கனார் மணிமண்டபம், கிழக்கு பகுதியில் திறந்த வெளி மைதானமாக பயன்படுத்தப்படுகிறது. நடுப்பகுதி பூங்காவில் 2014-15ம் ஆண்டில் ஒதுக்கிய நூற்றாண்டு நிதியில் ரூ.1.75 கோடி செலவில் நடைபாதை, கழிப்பறை, சுற்றுச்சுவர், நூற்றாண்டு நினைவு தூண் கட்டி உள்ளனர். அனைத்தும் அறை,குறையாக கட்டி அதற்கான பணம் பட்டா செய்துள்ளனர். தினசரி காலை 6 மணி முதல் 9 மணி வரை, மாலை 5 மணி வரை இரவு 8 மணி வரை திறந்து வைக்கின்றனர்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பாக பூங்காவின் உள்பகுதியில் சுமார் 2 ஆயிரம் சதுரஅடி பரப்பளவை நகர்நல அமைப்பிற்கு அடர்வனம் உருவாக்கத்திற்காக வழங்கி உள்ளனர். பேவர் பிளாக்கு பதிக்கப்பட்ட நடைபாதை முழுவதும் மேடு, பள்ளங்களாக இருக்கின்றன. பூங்கா வளாகத்தில் கட்டப்பட்ட கழிப்பறைகள் கடந்த 4 ஆண்டுகளாக மூடிக்கிடக்கிறது. இதனால் பயிற்சியாளர்கள் திறந்த வெளிகளை பயன்படுத்த வேண்டிய அவல நிலை தொடர்கிறது. பூங்காவில் கட்டப்பட்ட கேண்டீன் மூடிக்கிடக்கிறது. அத்துடன் தண்ணீர் ஊற்றும் முழுமையாக செயல்படவில்லை. பூங்காவில் 15க்கும் மேற்பட்ட மின்விளக்குகள் இருந்தாலும், இரவுநேரத்தில் பல பகுதிகள் இருள் சூழ்ந்து இருப்பதால் சிறுமிகள், பெண்களை அழைத்து வரும் கும்பல்கள் தவறான செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

பல பகுதிகளில் புதர்மண்டி கிடப்பதால் மாலை, அதிகாலை நேரங்களில் நடைபயிற்சி மேற்கொள்ளுபவர்கள் அச்ச உணர்வுடன் நடைபயிற்சி மேற்கொள்ளும் நிலை தொடர்கிறது. மின்கட்டண செலவாகும் என்ற காரணம் காட்டி கூடுதல் மின்விளக்குகள் பொருத்தாமல் போக்கு காட்டி வரும் நகராட்சி நிர்வாகம் தேவையற்ற செலவினங்களை குறைத்து மக்கள் அதிகம் வந்து செல்லும் கூடுதல் மின்விளக்கும் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்ய வேண்டும். பூட்டி வைத்துள்ள கழிப்பறைகளை திறக்க வேண்டுமென பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

Related Stories: