கோஹ்லிக்கு 4வது முட்டை!

டெஸ்டில் கேப்டன் கோஹ்லி சுழற்பந்துவீச்சில் டக் அவுட்டாவது இதுவே முதல் முறை. டெஸ்ட் போட்டிகளில் 4வது முறையாக முட்டை போட்டுள்ளார். இவை அனைத்தும் அவர் கடைசியாக விளையாடிய 21 இன்னிங்சில் கிடைத்தவை.  ஆனாலும், இந்த 21 இன்னிங்சில் அவர் 6 சதம் அடித்துள்ளதுடன், சராசரியாக 76.44 ரன் எடுத்துள்ளார். இதற்கு முந்தைய 42 இன்னிங்சில் ஒரு டக் அவுட் கூட இல்லை. சராசரி ரன் குவிப்பு 61.21.

* சென்னையில் கடைசியாக 2019, ஜனவரி 15ல் நடந்த இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் ஒருநாள் போட்டியை ரசிகர்கள் நேரில் பார்த்து மகிழ்ந்தனர். கொரோனா பிரச்னை காரணமாக, 424 நாட்களுக்குப் பிறகு தற்போதுதான் 2வது டெஸ்ட்  போட்டிக்கு ரசிகர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்

* அரங்கில் 50 சதவீத ரசிகர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். வெயில் காரணமாக நிழல் தேடிய ரசிகர்களாலும், நண்பர்கள், உறவினர்களுடன் வந்த ரசிகர்களாலும் பல இடங்களில் இருக்கைகள் இடைவெளியின்றி நிரம்பி வழிந்தன. கொடி,  பலூன், ஒலிப்பான்கள் எடுத்து வர அனுமதிக்கப்படவில்லை. ரசிகர்கள் முகத்தில் தேசியக் கொடியின் வண்ணங்களை வரையும் வேலைகள் வழக்கம் போல் நடந்தன. வீரர்களின் பெயர்கள் அச்சிடப்பட்ட சீருடைகள் விற்பனையும் ஜோராக  இருந்தது.

* முதல் டெஸ்டின் 2 இன்னிங்சிலும் முறையே 1,0 ரன் தான் எடுத்தார் ரகானே. விமர்சனம் எழுந்த நிலையில், அதற்கு பதிலடி கொடுப்பது போல் 67 ரன் அடித்தார். இடைவேளையின்போது ஒவ்வொரு முறையும் தியானம் செய்து விட்டு  களமிறங்கியதே அவர் கணிசமாக ரன் குவிக்க காரணம் என்கிறார்கள்.

* 75வது ஓவரில் ரகானே அடித்த பந்து கேட்ச் ஆனது. நடுவர் அவுட் கொடுக்காததால் ‘ரிவியூ’ கேட்டனர். அதில் பந்து பேட்டில் படவில்லை என்று தெரிந்தது. அதனால் ‘அவுட்’ இல்லை என்று சொன்ன பிறகும் இங்கிலாந்து வீரர்கள் நீண்ட நேரம்  நின்றபடியே இருந்தனர். ‘ரிவியூ’ வாய்ப்பும் வீணானது. அதன் பிறகு பந்து ரகானே கையுறை மீது பட்டுச் சென்றது தெரிந்தது. அடுத்த ஓவரில் ரகானே அவுட் ஆனார். அதன் பிறகு இங்கிலாந்து இழந்த ரிவியூ வாய்ப்பு மீண்டும் வழங்கப்பட்டது.

* டெஸ்ட் போட்டிகளில் ரோகித் அடித்த 7 சதங்களில் 2 சதங்கள் ரகானேவுடன் ஜோடியாக இருந்து எட்டியவை. இந்த 7 சதங்களையும் இந்திய மண்ணில்தான் அடித்துள்ளார். வெளிநாட்டில் ஒரு சதம்  கூட அடித்ததில்லை. இதுபோல்  வெளிநாட்டில் ஒரு சதம் கூட அடிக்காமல் உள்நாட்டில் அதிக சதம் அடித்தவர்கள் பட்டியலில்  வங்கதேச வீரர் மோமினுல் ஹக் (10 சதம்) முதலிடம் வகிக்கிறார்.   எப்எஸ் ஜாக்சன் (இங்கிலாந்து), சந்து போர்டே (இந்தியா), மார்னஸ்  லாபுஷேன்* (ஆஸ்திரேலியா) ஆகியோர் சொந்த மண்ணில் மட்டும் தலா 5 சதம் விளாசியுள்ளனர்.

* சொந்த மண்ணில் விளையாடிய டெஸ்ட் போட்டிகளில் அதிக சராசரி வைத்திருக்கும் வீரர்கள் பட்டியலில் ஆஸ்திரேலியாவின் டான் பிராட்மேனுக்கு (33 போட்டி, 4322 ரன், 98.22%, சதம் 18) அடுத்து ரோகித் 2வது இடம் பிடித்துள்ளார் (16  போட்டி, 1,504 ரன், சராசரி 83.55, சதம் 7).

* 2018 தொடக்கத்தில் இருந்து இது வரை சர்வதேச போட்டிகளில் அதிக சதம் அடித்த வீரர்கள் பட்டியலில் ரோகித் (19), கோஹ்லி (18), ரூட் (13) முன்னிலை வகிக்கின்றனர்.

*  நேற்றைய ஸ்கோரான 300 ரன்னில் இங்கிலாந்து அணி உதிரியாக ஒரு ரன் கூட தரவில்லை. டெஸ்ட் வரல்லாற்றில் இது 2வது இடம் பிடித்துள்ளது

Related Stories: