மம்தாவுக்கு அடுத்த அடி: திரிணாமுல் எம்பி ராஜினாமா

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் வருகிற ஏப்ரல், மே மாதத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. ஆட்சியை கைப்பற்றுவதற்கு பாஜ.வும், ஆட்சியை தக்கவைப்பதற்கு திரிணாமுல் காங்கிரஸ் கட்சியும் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இதன் எதிரொலியாக ஆளும் திரிணாமுல் காங்கிரசை சேர்ந்த எம்எல்ஏ.க்கள், அமைச்சர்கள், முக்கிய தலைவர்கள் பலர் கட்சியில் இருந்து விலகி பாஜ.வில் சேர்ந்து  வருகின்றனர். இந்நிலையில், மம்தாவுக்கு நேற்று அடுத்த அடி விழுந்தது. திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர் தினேஷ் திரிவேதி நேற்று தனது பதவியை ராஜினாமா செய்வதாக திடீரென அறிவித்தார்.

மாநிலங்களவையில் பேசிய அவர், “நான் மாநிலங்களவை பதவியை ராஜினாமா செய்கிறேன். எனது மாநிலத்தில் நடக்கும் வன்முறைகள் பற்றி என்னால் இங்கு எதுவும் பேச முடியவில்லை. உன்னால் எதுவும் செய்ய முடியாதபோது, பதவியை ராஜினாமா செய்து விடு என எனது மனசாட்சி கூறிக்கொண்டே இருந்தது. எனவே, ராஜினாமா செய்கிறேன்,” என்றார். தினேஷ் திரிவேதி ரயில்வே அமைச்சராக இருந்துள்ளார். 2 முறை மக்களவை  எம்பி.யாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டவர்.

Related Stories: