தென்னையில் ரூகோஸ் சுருள் வெள்ளை ஈ தாக்குதல் கட்டுப்படுத்த ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு முறை கடைபிடிக்க வேண்டும்: செயல்விளக்க முகாமில் விவசாயிகளுக்கு ஆலோசனை

புதுக்கோட்டை: தென்னையில் ரூகோஸ் சுருள் வெள்ளை ஈ தாக்குதல் கட்டுப்படுத்த ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு முறைகளை கடைபிடிக்க வேண்டுமென செயல்விளக்க முகாமில் விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டது.புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம் வட்டாரம் கே.ராசியமங்களத்தில் சாகுபடி செய்யபட்டுள்ள தென்னை மரங்களில் காணப்படும் ரூகோஸ் சுருள் வெள்ளை ஈக்களை கட்டுப்படுத்துவது குறித்த செயல்விளக்க முகாம் நடந்தது. வேளாண் இணை இயக்குநர் இராம.சிவகுமார் பேசியதாவது: திருவரங்குளம், கறம்பக்குடி, அறந்தாங்கி, மணமேல்குடியில் அதிக பரப்பளவில் தென்னை சாகுபடி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தற்போது சாகுபடி செய்யப்பட்டுள்ள தென்னை மரங்களில் ரூகோஸ் சுருள் வெள்ளை ஈக்கள் தாக்குதல் காணப்படுகிறது. இதை கட்டுப்படுத்த விவசாயிகள் பூச்சிமருந்து எதுவும் தெளிக்காமல் ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு முறைகளை கடைபிடித்து கட்டுப்படுத்த வேண்டும். மேலும் பாதிக்கப்பட்ட இலைகளின் மீது டிராக்டரினால் இயங்கும் சிறிய மோட்டார் மூலம் நீரை பீய்ச்சியடித்து வெள்ளை ஈக்களை கட்டுப்படுத்தலாம் என்றார்.தேசிய பயறுவகை ஆராய்ச்சி நிலைய பூச்சியியல் துறை உதவி பேராசிரியர் ராஜாரமேஷ் பங்கேற்று ரூகோஸ் சுருள் வெள்ளை ஈக்களை கட்டுப்படுத்த என்கார்சியா ஒட்டுண்ணிகள், கிரைசோபெர்லா இரைவிழுங்கிகள், பொறிவண்டுகள் போன்ற இயற்கையான எதிரிகளை பயன்படுத்தும் வழிமுறைகள் குறித்து எடுத்து கூறினார்.

​தென்னையில் ஊடுபயிராக உளுந்து, தட்டைப்பயறு ஆகியவற்றையும், வரப்பு பயிராக சணப்பு, தக்கைப்பூண்டு பயிரிடுவதால் நன்மை செய்யும் பூச்சிகள் தென்னந்தோப்புக்குள் கவரப்பட்டு வெள்ளை ஈக்களை கட்டுப்படுத்தலாம் என்று வேளாண் உதவி இயக்குநர் (தரக் கட்டுப்பாடு) மதியழகன் விளக்கமளித்தார்.5 அடிக்கு இரண்டரை அடி என்ற அளவில் விளக்கெண்ணெய் தடவிய மஞ்சள்நிற ஒட்டும் பொறிகளை வயல்வெளியில் வைத்து முதிர்ந்த வெள்ளை ஈக்களை கவர்ந்தழிப்பது குறித்து வேளாண்மை அலுவலர் (தர கட்டுப்பாடு) முகமது ரபி, தென்னந்தோப்பில் ஒரு ஏக்கருக்கு 2 வீதம் சூரியசக்தி விளக்குப்பொறியை இரவில் ஒளிர செய்வதன் மூலம் வெள்ளை ஈக்களை கவர்ந்தழிப்பது குறித்து ​வேளாண்மை அலுவலர் ரெங்கசாமி ஆகியோர் விளக்கம் அளித்தனர். ஏற்பாடுகளை உதவி வேளாண் அலுவலர் இளமாறன், மகேஸ்வரி செய்திருந்தனர்.

Related Stories: