டெல்லி எல்லையில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக பல்கலை மாணவர்கள் பேரணி: அணிவகுப்பதை தடுத்து போலீசார் தாக்கியதாக புகார்

புதுடெல்லி: வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து ஒற்றுமை பேரணியை நடத்திய மாணவர்கள் மீது போலீசார் தாக்கியதாக டெல்லி பல்கலை கழக மாணவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய வேளாண் சட்டங்களை திரும்பப்பெறக்கோரி விவசாயிகள் கடந்த இரண்டரை மாதங்களாக டெல்லி எல்லைகளில் திரண்டு போராடி வருகின்றனர். எனினும், மத்திய அரசு கண்டுகொள்ளவில்லை என கூறி, விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து டெல்லி பல்கலை கழக மாணவர்கள் நேற்று ஒற்றுமை பேரணி நடத்தினர்.

பேரணியின் போது டெல்லி பல்கலை கழகத்தை சேர்ந்த அகில இந்திய மாணவர் சங்கத்தின் (ஏஐஎஸ்ஏ) மாணவர்கள், மூன்று சர்ச்சைக்குரிய வேளாண் சட்டங்களை உடனடியாக ரத்து செய்ய வேண்டும், கைது செய்யப்பட்ட அனைத்து தலைவர்களையும் விடுவிக்க வேண்டும் என்ற முழக்கங்களை எழுப்பினர். அப்போது, பேரணி வல்லபாய் படேல் செஸ்ட் நிறுவனத்தை கடக்கையில், போலீசார் குறுக்கிட்டு தடுத்து நிறுத்தினர். எனினும், மாணவர்கள் கலை பீடத்தை நோக்கி தொடர்ந்து அணிவகுத்து சென்றனர். அங்கு ஒரு பொதுக் கூட்டத்தை நடத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டு அதில், ஏஐஎஸ்ஏ, ஜனநாயக மாணவர் சங்கம் மற்றும் பகத்சிங் சத்ரா ஏக்தா மன்ச் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளைசேர்ந்த மாணவர்கள் உரையாற்ற இருந்தனர்.

ஆனால், பீடத்திற்குள் நுழைந்ததும்,அங்கு போலீசார் மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தினர்.இதில் மாணவர்கள் பலர் காயமடைந்தனர். இதுபற்றி ஏஐஎஸ்ஏ அமப்பின் செயலாளர் ரித்விக்ராஜ் கூறுகையில், ‘‘டெல்லி காவல்துறையும் அரியானா காவல்துறையும் எங்கள் பகுதிக்குள் நுழைந்து குழப்பத்தை ஏற்படுத்தி தாக்குதலை நடத்தினர். ‘ஆன்டோலஞ்சீவி’யின் போன்ற போக்குகள் வெற்றிபெறாது. மாறாக, பாசிசத்துக்கு எதிராக இந்தியாவின் ஜனநாயகக் குரல்கள் தொடர்ந்து போராடும். கைது செய்யப்பட்ட அனைத்து விவசாயிகளையும் நோடீப் கவுரையும் அரசாங்கம் உடனடியாக விடுவிக்க வேண்டும்,”என்றார். ஆனால், போலீசார் மாணவர்களின் இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ளனர். டெல்லி காவல்துறையும் அரியானா காவல்துறையும் எங்கள் பகுதிக்குள் நுழைந்து குழப்பத்தை ஏற்படுத்தி தாக்குதலை நடத்தினர்.

Related Stories: