அனைத்து சட்டமன்ற தொகுதிகளில் இயங்கும் மதுபான கடையில் விற்பனை எவ்வளவு? விவரங்களை சமர்ப்பிக்க கலால்துறை உத்தரவு; அரசு நடத்தும் சில்லறை கடைகளை குறைக்க முடிவு

புதுடெல்லி: டெல்லியின் அனைத்து சட்டமன்றத் தொகுதிகள் மற்றும் இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் அமைந்துள்ள தனியார் மற்றும் அரசு மதுபான கடைகள் தங்களது விற்பனை விவரங்களை சமர்ப்பிக்குமாறு டெல்லி கலால் துறை அறிவுறுத்தியுள்ளது. டெல்லியில் அரசு மற்றும் தனியார் வசம் உள்ள மதுபானக்கடைகளின் எண்ணிக்கை 850 ஆக உள்ளது. இதில் 60 சதவீத கடைகளை அரசு நடத்தி வருகிறது. இந்நிலையில், அரசு வசம் உள்ள சில்லறை மதுபான விற்பனையை குறைத்து தனியாரின் பங்களிப்பை அதிகரிக்க அரசு முடிவு செய்தது. இதற்காக துணை முதல்வர் சிசோடியா தலைமையில் கலால் வரித்துறை கமிட்டி அமைக்கப்பட்டது. இந்த கமிட்டி சில பரிந்துரைகளை அரசுக்கு வழங்கியது.

இதனைதொடர்ந்து டெல்லி ஆம் ஆத்மி அரசு உத்தரவின்பேரில், சுகாதார அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் மற்றும் சட்ட மந்திரி கைலாஷ் கெலாட் ஆகியோர் தற்போதைய கலால் வரி நிர்வாகத்தின் அனைத்து அம்சங்களையும் ஆராய்ந்து, நிபுணர் குழுவின் அறிக்கை மற்றும் பங்குதாரர்கள் மற்றும் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட பரிந்துரைகளை ஆய்வு செய்ய உத்தரவிட்டது. இதன்தொடர்ச்சியாக, அமைச்சர்கள் குழு பரிந்துரையின்பேரில், டெல்லி சுற்றுலா மற்றும் போக்குவரத்து மேம்பாட்டுக் கழகம், தில்லி மாநில தொழில்துறை மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டுக் கழகம், டெல்லி மாநில சிவில் சப்ளைஸ் கார்ப்பரேஷன் லிமிடெட் மற்றும் டெல்லி நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை கடை ஆகியவற்றுடனான ஆலோசனை கூட்டத்திற்கு பின் மதுபான கடைகளை திறக்க அனுமதி வழங்கப்பட்டது. இதனிடையே, டெல்லியின் அனைத்து சட்டமன்றத் தொகுதிகள் மற்றும் இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் அமைந்துள்ள தனியார் மற்றும் அரசு  மதுபான கடைகள் தங்களது விற்பனை விவரங்களை சமர்ப்பிக்குமாறு டெல்லி கலால்  துறை கடிதம் ஒன்றை எழுதி அறிவுறுத்தியுள்ளது.

Related Stories: