வால்பாறையில் ரேஷன் கடையை உடைத்து சூறையாடிய காட்டு யானைகள்: 50 மூட்டை அரிசி பதுக்கியது அம்பலம்

வால்பாறை: வால்பாறையில்  ரேஷன் கடையை காட்டு யானைகள் சூறையாடின. அப்போது கடையில் 50 மூட்டை ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருந்தது அம்பலமானது. கோவை மாவட்டம் வால்பாறையை அடுத்துள்ளது சிங்கோனா ரயான் டிவிசன் எஸ்டேட். கேரள வனப்பகுதியை  ஒட்டிய இந்த எஸ்டேட்டுக்குள் நேற்று அதிகாலை 1 மணியளவில் வனத்திற்குள் இருந்து வெளியேறிய 6 காட்டு யானைகள் புகுந்தன. அந்த யானைகள் ரேஷன் கடையை உடைத்தன. கடைக்குள் இருந்த அரிசி மூட்டைகளை பிரித்து அரிசியை சுவைக்க ஆரம்பித்தன.

தகவல் அறிந்த அப்பகுதி மக்கள் மற்றும் தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள் யானைகளை விரட்ட திரண்டனர். வனத்துறைக்கும் தகவல் அளித்துவிட்டு, குடியிருப்புகளுக்குள் யானைகள் நுழையாமல் தடுக்க தீ வைத்தும், பட்டாசு வெடித்தும், சத்தமிட்டும் யானைகளை விரட்ட முயற்சித்தனர். இருப்பினும் ரேஷன் கடையில் இருந்த அரிசி மூட்டைகளை பிரித்து அரிசியை சாப்பிட்டன. 50 மூட்டைகளில் 12 மூட்டை அரிசியை யானைகள் எடுத்து வெளியே வீசின. 5 மூட்டைகள் அரிசி வீணாகியது. மகளிர் குழு நடத்தும் இந்த ரேஷன் கடையில் இம்மாதத்திற்குரிய அத்தியாவசிய பொருட்களை நுகர்பொருள் வாணிப கழக குடோனில் இருந்து இதுவரை எடுக்கவில்லை.

ஆனால் 50 மூட்டை அரிசி கடையில் இருப்பு வைத்திருந்தது யானைகள் மூலம் அம்பலமாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கணக்கில் இல்லாத 50 மூட்டை அரிசி ரேஷன் கடைக்குள் எப்படி வந்தது? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. வனத்துறையினர் கூறுகையில், ‘‘எஸ்டேட் பகுதி ரேஷன் கடைகளில் அரிசி, பருப்பு இருப்பு வைக்கக்கூடாது என ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆனால் 50 மூட்டை அரிசி எப்படி வைக்கப்பட்டது என தெரியவில்லை’’ என்றனர். வட்ட வழங்கல் தாசில்தார் மூர்த்தி கூறுகையில், ‘‘இம்மாதம் அரிசி எடுக்காத நிலையில் 50 மூட்டை அரிசியை யார் பதுக்கி வைத்திருந்தது என முறையான விசாரணை நடத்தப்படும்’’ என்றார்.

Related Stories: