சிறையில் உள்ள கைதிகளில் 66% பேர் எஸ்சி, எஸ்டி, ஓபிசி: நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தகவல்

புதுடெல்லி: நாடு முழுவதும் சிறையில் உள்ள கைதிகளில் 3.15 லட்சம் பேர், அதாவது 66 சதவீதம் பேர் எஸ்சி, எஸ்டி, ஓபிசி பிரிவை சேர்ந்தவர்கள் என்று மத்திய அரசு மாநிலங்களவையில் தகவல் தெரிவித்துள்ளது. மாநிலங்களவையில் ஜனாதிபதியின் உரை மீதான நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் போது, நாட்டில் உள்ள சிறை கைதிகளில் எத்தனை பேர் தாழ்த்தப்பட்டவர்கள், முஸ்லிம்கள் உள்ளனர். அவர்களின் மறுவாழ்வு, கல்விக்கு அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என்று கேள்வி எழுப்பினார். இதற்கு மத்திய உள்துறை இணை அமைச்சர் கிஷண் ரெட்டி எழுத்து பூர்வமாக அளித்த பதிலில் கூறியதாவது: நாடு முழுவதும் சிறையில் உள்ள மொத்த கைதிகளின் எண்ணிக்கை 4 லட்சத்து 78 ஆயிரத்து 600 ஆகும். இவர்களில் 3 லட்சத்து 15 ஆயிரத்து 409 பேர், அதாவது 65.90 சதவீதத்தினர் எஸ்சி, எஸ்டி, ஓபிசி பிரிவை சேர்ந்தவர்கள் ஆவர்.

மற்ற ஒரு லட்சத்து 26 ஆயிரத்து 393 பேர் இதரப் பிரிவுகளை சேர்ந்தவர்கள். இவர்களில், 1,62,800 கைதிகள் (34.01%) ஓபிசி, 99,273 பேர் (20.74%) எஸ்சி, 53,336 கைதிகள் (11.14%) எஸ்டி பிரிவை சேர்ந்தவர்களாவர். மொத்தமுள்ள கைதிகளில், 4,58,687 (4.16%) பேர் ஆண்கள், 19,913 (4.16%) பெண்கள் ஆவர். இவர்களில் 6,360 (31.93%) பெண்கள் ஓபிசி, 4,467 (22.43%) எஸ்சி, 2,281 பேர் (11.45%) எஸ்டி பிரிவுகளை சேர்ந்தவர்களாவர். இதில், அதிகபட்சமாக உத்தர பிரதேச மாநிலத்தில் இருந்து 1,01,297 (21.16%) கைதிகள் சிறையில் உள்ளனர். இதைத் தொடர்ந்து மத்திய பிரதேசம், பீகார் மாநிலங்களில் இருந்து முறையே 44,603 மற்றும் 39,814 பேர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அதிகளவிலான எஸ்சி, ஓபிசி, இதரப் பிரிவினர் உத்தர பிரதேசத்திலும், அதிகபட்ச எஸ்டி பிரிவினர் மத்திய பிரதேசத்திலும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: