சுயதொழில் தொடங்க மானிய கடன் வழங்காமல் மாற்றுத்திறனாளி பெண்ணை அலைக்கழிக்கும் வங்கி நிர்வாகம்:காற்றில் பறக்கும் கலெக்டர் உத்தரவு

பேராவூரணி : பேராவூரணி அருகே மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு தொழில் தொடங்குவதற்கு மானியத்துடன் கூடிய கடன் பெறுவதற்கு கலெக்டர் உத்தரவிட்டும் வங்கி நிர்வாகம் அலைக்கழிப்பதாகவும், அலட்சியப்படுத்துவதாகவும் வேதனை தெரிவித்துள்ளார்.

தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகே உள்ள கலைஞர்நகர் சமத்துவபுரம் பகுதியைச் சேர்ந்தவர் நீலகண்டன் மனைவி சந்திரலேகா (40), பின்தங்கிய சமூகத்தைச் சேர்ந்தவரான இவர் மாற்றுத்திறனாளியாவார். போலியோவால் இவரது கால் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த ஆண்டு மார்ச் மாதம், டிபன் கடை வைப்பதற்காக மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நலத்துறை அலுவலகம் மூலம் வங்கிக் கடன் கேட்டு விண்ணப்பித்திருந்தார்.

இதையடுத்து இவரது மனுவைப் பரிசீலித்த மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகம், சுய வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ், ரூ.25 ஆயிரம் மானியத்துடன் ரூ.75 வங்கிக் கடன் வழங்குவதற்கான பரிந்துரையை பேராவூரணி அருகே உள்ள பூக்கொல்லை இந்தியன் ஓவர்சீஸ் வங்கி நிர்வாகத்திற்கு செய்திருந்தது. மேலும் கலெக்டர் 21.12.2020 தேதியிட்ட ரூ 25 ஆயிரம் மானியத்துக்கான காசோலையையும் சந்திரலேகாவிடம் வழங்கி உள்ளார். கலெக்டர் அளித்த ரூ.25 ஆயிரத்துக்கான மான்ய காசோலையை பூக்கொல்லை இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கிளை மேலாளரிடம் அளித்த சந்திரலேகா வங்கி நிர்வாகம் கேட்ட அனைத்து ஆவணங்களையும் தானே அலைந்து வாங்கி கொடுத்துள்ளார்.

அனைத்தையும் பெற்றுக் கொண்ட வங்கி நிர்வாகம், கடன் வழங்காமல் இதுவரை இழுத்தடித்து வருவதாக கூறப்படுகிறது. இதனால் மனம் உடைந்த சந்திரலேகா, கடந்த பிப்.5ம் தேதி, பேராவூரணி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற மாற்றுத் திறனாளிகளுக்கு உதவி உபகரணங்கள் வழங்கும் விழாவில், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சாமிநாதனிடம், ஓராண்டாக வங்கிக்கடன் வாங்க அலைந்து திரிவதாகவும், வங்கி அதிகாரிகள் அலைக்கழிப்பால் தற்கொலை செய்து கொள்வதைத் தவிர வேறு வழியில்லை என கூறி கதறி அழுதார்.

ஆறுதல் கூறிய அவர் மீண்டும் இது குறித்து விரிவாக தகவல் எழுதி ஒரு மனு தாருங்கள். கடன் கிடைக்க நடவடிக்கை எடுக்கிறேன் என உறுதியளித்துள்ளார்.இதுகுறித்து சந்திரலேகா கூறியது: வங்கியில் கடன் கேட்டு கலெக்டர் பரிந்துரை கடிதத்துடன் சென்றபோது, அங்கிருந்த அலுவலர்கள், இதுபோல நூறு கடிதம் வருகிறது. எல்லாருக்கும் பணத்தை தூக்கி கொடுக்க முடியாது என்கின்றனர்.

பின்னர் வங்கிக் கடன் பாக்கி ஏதும் இல்லை என கிளியரன்ஸ் கடிதம் கேட்டனர். இது தொடர்பாக பேராவூரணி ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா, மத்திய கூட்டுறவு வங்கி, என பல வங்கிகளுக்கு அலைந்து திரிந்து, கிளியரன்ஸ் சர்டிபிகேட் வாங்கிக் கொடுத்தேன். பின்னர் உதயம் ரிஜிஸ்ட்ரேசன் என ஆன்லைனில் பதிவு செய்யச் சொன்னார்கள். ஆயிரம் ரூபாய் செலவு செய்து இ-சேவை மையம் மூலம் பதிவு செய்து கொடுத்தேன். பின்னர் பொருட்கள் வாங்குவதற்கு கொட்டேசன் கேட்டனர்.

வாங்கி வந்து கொடுத்த பிறகு, இது சரியில்லை. எந்த கம்பெனி பொருட்கள், எத்தனை எண்ணிக்கையிலான பொருட்கள் என வேறு கொட்டேசன் வாங்கி வாருங்கள் என்றனர். அதையும் வாங்கி கொடுத்தேன். எங்கே கடை திறக்கப்போகிறீர்கள் எப்படி வியாபாரம் நடக்கும் என ஏளனமாக பேசினர். இப்போது மேனேஜர் இல்லை. பீல்டு ஆபிசர் லீவு என, சாக்குப் போக்கு சொல்லி கடன் வழங்காமல் திருப்பி அனுப்பி வைப்பதிலேயே குறியாக உள்ளனர். இதனால் பல ஆயிரம் ரூபாய் செலவு செய்தது தான் மிச்சம்.

என்னை மாற்றுத் திறனாளி பெண் என்றும் பாராமல் வங்கி அலுவலர்கள் அலைக்கழிக்கின்றனர். கலெக்டர் தந்த காசோலைக்கும், பரிந்துரைக்கும் இவர்கள் மதிப்பு தரவில்லை.நேர்மையாக உழைத்து, கடனை திருப்பிச் செலுத்த நினைக்கும் என் போன்ற எளியவர்களை வங்கி நிர்வாகம் வதைக்கிறது என்றார்.

Related Stories: