பண்ருட்டி பகுதியில் அகற்றப்படாத குப்பையால் சுகாதார சீர்கேடு

பண்ருட்டி : பண்ருட்டியில், கும்பகோணம் சாலையில் உள்ள பெரியார் டெப்போ அருகில் குப்பை அள்ளுவதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது. இதன் காரணமாக குப்பைகள் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. இதேபோல் வட்டாட்சியர் அலுவலகம் பின்புறம் விவசாய பொருட்களை காயவைப்பது போல் குப்பைகளை தனித்தனியாக கொட்டி காய வைத்து வருகின்றனர். இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. இந்த பகுதி அருகே ஏராளமான வீடுகள் உள்ளதால் துர்நாற்றம் வீசுவதாக அப்பகுதியினர் கூறுகின்றனர்.

நோய் தொற்று ஏற்பட்டு பாதிப்பு ஏற்படுவதற்கு முன் பெரியார் டெப்போ உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கொட்டியுள்ள குப்பைகளை உடனடியாக அகற்ற வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து நகராட்சி சுகாதார அலுவலர் ஜெயச்சந்திரனிடம் கேட்டபோது, நகராட்சி பகுதியில் உள்ள குப்பைகள் அவ்வப்போது அகற்றப்படுகிறது. பொதுமக்கள் கூறும் புகாரின் அடிப்படையில் சாலையோர பகுதிகளில் உள்ள குப்பைகள் உடனடியாக அகற்றப்படும், என்றார்.

Related Stories: