வேலூர், தி.மலை, திருப்பத்தூரில் கொட்டி தீர்த்த கோடை மழை; மரங்கள் முறிந்து விழுந்தன; நெற்பயிர்கள் சேதம்

வேலூர்: வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர் மாவட்டங்களில் ேகாடை மழை இன்று அதிகாலை கொட்டி தீர்த்தது. பல இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தன. நெய்பயிர்கள் சேதமாயின.தமிழகத்தில் எப்போதும் இல்லாத வகையில் இந்தாண்டு கோடை வெயில் 2 மாதங்களுக்கு முன்பே அதிகரித்துள்ளது. 20க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் வெயில் தினமும் சதம் அடித்து வருகிறது. வெப்ப அலை வீசுவதால் மக்கள் தவித்து வருகின்றனர். அக்னி நட்சத்திரத்துக்கு முதல் 3 நாட்களில் 110 டிகிரியை தாண்டியது. இதேநிலை தற்போது நீடித்து வருவதுடன், வெப்ப அலையின் தாக்கமும் மக்களை அசாதாரண சூழ்நிலைக்கு தள்ளியுள்ளது.

இந்நிலையில் தமிழ்நாட்டில் வெயில் படிப்படியாக குறையும் என இந்திய வானிலை மையம் அறிவித்திருந்தது. இருப்பினும் நேற்று ஒரு சில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை காட்டிலும் 3 டிகிரி முதல் 5 டிகிரி செல்சியஸ் வரை அதிகரித்து காணப்பட்டது. இந்நிலையில் வேலூர், திருப்பத்தூர் உள்பட 14 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை மையம் அறிவித்திருந்தது. அதன்படி திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கத்தில் இன்று அதிகாலை 4.30 மணியளவில் கனமழை பெய்தது. பலத்த காற்று மற்றும் இடி, மின்னலுடன் 7 மணி வரை விடாமல் பலத்த மழை கொட்டியது. காலை 7 மணி நிலவரப்படி கலசப்பாக்கத்தில் 27 மி.மீ. மழை பதிவானது. திருவண்ணாமலை மாவட்டத்தில் 6,500 ஹெக்டர் பரப்பளவில் நெல் பயிரிட்டிருந்தனர். திடீர் மழையால் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் சேதமானது. அதேபோல் அறுவடை செய்த நெல் மூட்டைகள் விற்பனைக்காக வைத்திருந்தபோது மழையில் நனைந்து சேதமானது.

போளூரில் நள்ளிரவு 1 மணி முதல் விடியவிடிய பலத்த மழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகள், விவசாய நிலங்களில் மழை நீர் தேங்கியது. திருவண்ணாமலையில் அதிகாலை 5 மணி முதல் மிதமான மழை பெய்தது. மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்ததால் கோடை வெப்பம் தணிந்து பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை சுற்றுப்பகுதியில் இன்று அதிகாலை முதல் கன மழை பெய்தது. மாவட்டத்தில் ஆம்பூரில் 6.4 மி.மீ, மாதனூரில் 5.3 மி.மீ, ஆலங்காயத்தில் 3 மி.மீ, நாட்றம்பள்ளியில் 43 மி.மீ, கேதாண்டப்பட்டியில் 19 மி.மீ, திருப்பத்தூரில் 2.2 மி.மீ என மாவட்டம் முழுவதும் 73 மி.மீ மழை பதிவானது.

வேலூர்: வேலூர் மாவட்டத்தில் இன்று அதிகாலை 4 மணியளவில் பலத்த காற்று, இடியுடன் கூடிய கன மழை பெய்தது. அப்போது, குருவராஜபாளையம் பகுதியில் வேலூர்-ஒடுகத்தூர் செல்லும் சாலையில் புளியமரம் வேரோடு சாய்ந்தது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கே.வி.குப்பம் மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் இன்று அதிகாலை இடி மின்னல் மற்றும் சூறை காற்றுடன் பலத்த மழை பெய்தது. அறுவடைக்கு தயாராக இருந்த வாழை மரங்களும் முறிந்து சேதமானது. கீழ் ஆலத்தூர், அர்ஜூனாபுரம், செண்ணங்குப்பம், கே.ஏ.மோட்டூர் ஆகிய பகுதிகளில் காட்பாடி-குடியாத்தம் தேசிய நெடுஞ்சாலை, கீழ் ஆலத்தூர்-நாகல் சாலை, பசுமாத்தூர்-அர்ஜூனாபுரம் சாலைகளில் மரங்கள் முறிந்து விழுந்தன. தகவலறிந்த நெடுஞ்சாலை துறை, மின்வாரிய துறை, காவல் துறையினர், வருவாய் துறையினர் சம்பவ இடங்களுக்கு சென்று ஜே.சி.பி இயந்திரங்கள் மூலம் மரங்களை அகற்றி போக்குவரத்தை சரி செய்தனர்.

The post வேலூர், தி.மலை, திருப்பத்தூரில் கொட்டி தீர்த்த கோடை மழை; மரங்கள் முறிந்து விழுந்தன; நெற்பயிர்கள் சேதம் appeared first on Dinakaran.

Related Stories: