உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்காக 21 மியான்மர் நோயாளிகள் டெல்லி மருத்துவமனை வருகை

புதுடெல்லி: உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்காக 21 மியான்மர் நோயாளிகள் டெல்லி மருத்துவமனைக்கு வந்துள்ளனர். டெல்லி இந்திரபிரஸ்தா அப்போலோ மருத்துவமனை உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கு பிரபலம். இங்கு பல்வேறு நாடுகளை சேர்ந்தவர்கள் வந்து குறைந்த செலவில், மிகச்சிறந்த சிகிச்சை பெற்றுச்செல்கிறார்கள். இதை அறிந்த மியான்மர் நாட்டை சேர்ந்த 21 பேர் பல்வேறு முக்கிய அறுவைசிகிச்சைக்காக இந்திரபிரஸ்தா மருத்துவமனையில் முன்பதிவு செய்து இருந்தனர். கடந்த 6 மாதங்களுக்கு முன்பே அவர்கள் முன்பதிவு செய்து இருந்தார்கள்.

இதையடுத்து இந்திய தூதரகம் சார்பில் கலந்து பேசி அவர்களை டெல்லிக்கு அழைத்து வர சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டது. அதன்படி சிறப்பு விமானம் மியான்மருக்கு சென்றது. அங்கு நோயாளிகள் 21 பேரை ஏற்றிக்கொண்டு பிப்ரவரி 5ம் தேதி விமானம் இந்தியா வந்தது. சிறுநீரகம், கல்லீரல் அறுவை மாற்று சிகிச்சை உடனடியாக நடத்த இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் இருதய நோய் அறுவை சிகிச்சைக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கொரோனா காரணமாக அவர்கள் டெல்லிக்கு விமானம் மூலம் வரமுடியாமல் தவித்தனர். தற்போது மத்திய அரசு மூலம் அவர்கள் அனைவரும் பத்திரமாக டெல்லிக்கு வரவழைக்கப்பட்டுள்ளனர்.

மியான்மரில் உள்ள இந்திய தூதரகம் இதற்கு மிகவும் உதவியது. 21 நோயாளிகளையும் டெல்லி இந்திரபிரஸ்தா அப்போலோ மருத்துவமனை டாக்டர்கள் சந்தீப் குலேரியா, சஞ்சீவ் ஜாசுஜா, நீரவ் கோயல், அமித் மிட்டல் ஆகியோர் கடந்த 6 மாதங்களாக கண்காணித்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதுபற்றி டாக்டர் குலேரியா கூறுகையில்,’ யாரும் எதிர்பார்க்காத வகையில் வந்த கொரோனா நோய் பாதிப்பால் மிகப்பெரிய அளவில் உலகம் முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு, எல்லைகள் மூடப்பட்டதுடன், சர்வதேச விமான சேவையும் ரத்து செய்யப்பட்டது. இதனால் இந்தியாவில் மருத்துவ சிகிச்சைக்காக வரும் லட்சக்கணக்கான நோயாளிகள் பாதிக்கப்பட்டனர்.

தற்போது கொரோனா தாக்கம் இந்தியாவில் குறைந்து இருப்பதால் நோயாளிகள் அறுவை சிகிச்சைக்காகவும், அவசர தேவைக்காவும் இந்தியா வர மத்திய அரசு அனுமதி பெற்று வரவழைக்க முடிந்தது’ என்றார். டாக்டர் மிட்டல் கூறுகையில்,’ இந்தியா வந்துள்ள 21 நோயாளிகளுக்கும் அவர்கள் அவசரத்திற்கு ஏற்பட அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படும். 21 பேரில் பெரும்பாலானோர் இருதய மாற்று அறுவை சிகிச்சைக்கு வந்துள்ளனர். மற்றவர்களுக்கு சிறுநீரகம், கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்யப்படும்’ என்றார்.

Related Stories: