பாஜவில் அண்ணாமலை இணைந்தது ரொம்ப வருத்தம் தான் சட்டசபை தேர்தலில் போட்டியிடுவேனா? காங்கிரஸில் உள்ள முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சசிகாந்த் செந்தில் பேட்டி

* உயர்ந்த பதவி மற்றும் மக்கள் கலெக்டர் என்ற பெயரை எடுத்த நீங்கள், திடீரென பதவியை ராஜினாமா செய்து காங்கிரஸில் இணைய காரணம் என்ன?

நாட்டிற்குள் ஒரு பாசிசம் சிஸ்டம் வந்து விட்டது என்பதால் பதவியில் இருக்கும் போதே எனது பதவியை ராஜினாமா செய்தேன். பாசிசத்தை எதிர்த்து ஏதாவது நாம் பண்ண வேண்டும் என்ற எண்ணம் என்னிடம் இருந்தது. பதவியில் இருந்து வெளியே வந்து ஒரு ஆண்டாக மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தேன். அப்போது எனக்கு ஒரு விஷயம் தோன்றியது. மக்கள் போராட்டத்திற்கு முன்னாடி ஒரு அரசியல் ஆப்ஷன் இருக்க வேண்டும். அப்படி பார்த்ததில் பாஜவை எதிர்த்து சண்டை போடுபவர்கள் என்று பார்த்ததில் காங்கிரஸ் மட்டும் தான் முன்னிலையில் இருந்தது. எனது எண்ணத்தை ராகுல்காந்தி நன்றாக புரிந்து கொண்டார். அந்த காரணத்திற்காக தான் காங்கிரஸில் இணைந்தேன். பாஜவில் இணைந்த அண்ணாமலையை பற்றி நினைக்க ஒன்றும் இல்லை என்று தான் தோன்றுகிறது. அரசியல் ஆதாயத்துக்காக இன்றைக்கு அமைதியை குலைக்க பார்க்கிறார்கள் என்ற  பெயர் பாஜ கட்சிக்கு உள்ளது. அதில் அண்ணாமலை  இருக்கிறார் என்பதில் எனக்கு ரொம்ப  பெரிய வருத்தம்.  

* பாஜகவுக்கு எதிராக தடாலடியாக குரல் கொடுத்த நீங்கள் தற்போது அமைதியாக இருக்க காரணம்?

அப்படி எல்லாம் ஒன்றும் இல்லை. ராகுல்காந்தியின் தேர்தல் பிரசாரம் ரொம்ப வேகமாக போய்க்கொண்டு இருக்கிறது. அந்த வேலையில் நாங்கள் ஈடுபட்டு கொண்டிருக்கிறோம். நிறைய பயிற்சிக்கு போவதால் நேரம் கிடைப்பது இல்லை. பிப்ரவரி 2ம் தேதி தாக்கல் செய்யப்பட்ட மத்திய அரசின் பட்ஜெட் குறித்து கூட என்னுடைய கருத்தை தெரிவித்தேன். மக்களை தொடர்ந்து சந்தித்து கொண்டு தான் இருக்கிறேன். டிவிட்டர், பேஸ்புக்கில் பதிவு பண்ணுவது எனக்கு பழக்கம் கிடையாது. மக்களை நேரில் சந்தித்து பேசுகிறேன். கட்சிக்காக உழைப்பவர்களை ஊக்கப்படுத்துவது போன்ற பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறேன்.

* பாஜவில் இணைந்த முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலைக்கு உடனடியாக கட்சியில் துணை தலைவர் பதவி வழங்கப்பட்டது. ஆனால் உங்களுக்கு காங்கிரஸில் பதவி வழங்கவில்லையே?

நான் இருந்த பதவியை விட மிகக்கவுரமான பதவி எதுவும் கிடையாது. கட்சியில் பதவி என்பது எனக்கு முக்கியமாக தோன்றவில்லை. எனக்கு தோன்றுவது, நம்முடைய செயல்பாடு மக்களுடன் இருக்கிறதா? என்பது தான். அதை பொறுத்து தான் நமக்கு ஒரு பதவியும், மக்களால் பார்த்து கொடுப்பது தான் அரசியல் என்று நம்புபவன் நான். பவர் பால்டிக்ஸ் வேறு. பீப்புள் பால்டிக்ஸ் என்பது வேறு. நான் பீப்பிள் பால்டிக்ஸில் இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். அதற்கான நிறைய வேலைகள் செய்ய வேண்டியது உள்ளது. இப்போது தான் நான் வந்து இருக்கிறேன். தமிழகத்தை நல்ல படியாக முதலில் புரிந்து கொள்ள வேண்டும். எல்லா இடத்துக்கும் செல்ல வேண்டும். அப்படி வரும் போது பதவி கிடைத்தால் நல்லா இருக்கும் என்று மக்கள் என்றைக்கு நினைக்கிறார்களோ? அன்று கண்டிப்பாக பதவி வரும் என்று நினைக்கிறேன்.

* சட்டசபை தேர்தலில் போட்டியிட்டால் எந்த தொகுதியை தேர்ந்தெடுப்பீர்கள்?

பாஜக தமிழகத்தில் வரக்கூடாது. இதற்காக எந்த இடத்திற்கு சென்று வேலை செய்ய வேண்டுமோ? அந்த இடத்திற்கு சென்று வேலை செய்வேன். ஒரு தொகுதியில் முடங்கி விட்டேன் என்றால் கஷ்டம். என்னுடைய  எண்ணம் அப்படி கிடையாது. தேர்தலில் போட்டியிட வேண்டும் என்று ஒரு நிலைமை வந்தால், பின் வாங்க மாட்டேன். அவர்கள் கொடுக்கிற மாதிரி இருந்தால், எந்த தொகுதி கொடுத்தாலும் ேபாட்டியிடுவேன் என்பது ஒரு பார்வை. அதில் நான் வருவதே கிடையாது. போட்டியிட வேண்டாம். எல்லா தொகுதிக்கும் போக வேண்டும் என்று நினைக்கிறேன். எனது அணி ஜெயித்தால் போதும் என்று நினைப்பவன். அதற்காக நல்ல வேலை பார்க்க வேண்டும் என்பது தான் எனது எண்ணம். அதையும் தாண்டி இந்த தொகுதியில் நீங்கள் தான் நிற்க வேண்டும், வேற வழியில்லை என்றால் நான் போட்டியிடுவேன்.

Related Stories: