உண்ணாவிரதம் இருக்க முயன்ற ஜாக்டோ-ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள் கைது: அரசு நடவடிக்கை

சென்னை:  அரசு அறிவித்த புதிய ஓய்வு ஊதிய திட்டத்தை கைவிட்டு, பழைய ஓய்வு ஊதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் 72 மணி நேரம் தொடர் உண்ணா விரதத்தை தொடங்கிய  ஜாக்டோ-ஜியோ அமைப்பின் ஒருங்கிணைப்பாளர்கள் 17 பேரை போலீசார் கைது செய்தனர்.  திருச்சியில் 31ம் தேதி நடந்த  ஜாக்டோ-ஜியோ உயர்மட்டக் குழு கூட்டம் நடந்தது. அதில் முக்கிய மற்றும் பள்ளிக் கல்வி அமைச்சருக்கு எதிரான கண்டன தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. குறிப்பாக புதிய ஓய்வு ஊதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வு ஊதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி, ஜாக்ேடா-ஜியோ அமைப்பின் ஒருங்கிணைப்பாளர்கள் 20 பேர், 8, 9 மற்றும் 10ம் தேதி தொடர்ந்து 72 மணி நேரம் சென்னையில் உண்ணாவிரதம் இருக்க முடிவானது.

அறிவித்தபடி, சென்னை எழிலக வளாகத்தில் நேற்று காலை ஒருங்கிணைப்பாளர்கள், அன்பரசு, செல்வம், தாஸ், சேகர், மோசஸ், தியாகராஜன், வின்சென்ட், ராஜராஜன், சங்கரபெருமாள், பக்தவச்சலம், ஆறுமுகம், வெங்கடேசன், சுரேஷ், அசோக்குமார் உள்ளிட்ட 17 பேர் உண்ணா விரதம் இருக்க வந்தனர். அவர்களை போலீசார் தடுத்தனர். அங்கிருந்த பந்தலையும் போலீசார் அகற்றினர். அவர்களை கைது செய்து சேப்பாக்கம் மாநகராட்சி பூங்காவில் அடைத்தனர்.    இந்த கைது குறித்து தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் தலைவர் தியாகராஜன் அளித்த பேட்டி:புதிய பங்களிப்பு ஓய்வு திட்டத்தின் கீழ் எங்்களிடம் இருந்து பிடித்தம் செய்த ரூ.30 ஆயிரம் கோடி எங்கே போனது. மத்திய அரசு உயர்த்தி வழங்கிய ஊதிய உயர்வின்படி ஐஏஎஸ், ஐபிஎஸ் நிலையில் உள்ளவர்களுக்கு உயர்த்தி வழங்கிவிட்டார்கள். ஆனால் அடுத்த நிலையில் உள்ள எங்களைப் போன்றவர்களுக்கு ஏன் வழங்க மறுக்கின்றனர். எனவே இதற்கு தீர்வு காணவேண்டியது முதல்வர்தான். அதைவிட்டு, எங்களை கைது செய்வது, போராட்டத்தை தடுப்பது முடியாத காரியம். நாங்கள் எதற்கும் தயாராக இருக்கிறோம் என்றார்.

Related Stories: