MSP முடிவுக்கு வருகிறது என்று நாங்கள் எப்போது சொன்னோம்?: MSP உறுதி செய்ய எந்த சட்டமும் இல்லை: விவசாய சங்க தலைவர் பேட்டி

டெல்லி: குறைந்தபட்ச ஆதரவு விலையை உறுதி செய்வதற்காக எந்த சட்டமும் இல்லாததால் வியாபாரிகள் விவசாயிகளிடமிருந்து கொள்ளையடிக்கப்படுவதாக விவசாய சங்க தலைவர் குற்றம்சாட்டியுள்ளார். குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி மாநிலங்களவையில் உரை நிகழ்த்தினார். அப்போது, வேளாண் சட்டம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் சுமார் 14 மணி நேரம் ஆலோசனை நடைபெற்றது. வேளாண் சட்டம் தொடர்பான விவாதத்தில் சுமார் 50 எம்பிக்கள் பேசியுள்ளனர்.

வேளாண் சட்டங்களை எதிர்ப்பதில் எவ்வித அர்த்தமும் இல்லை. புதிய வேளாண் சட்டங்களால் விவசாயிகளின் நிலம் பறிபோகாது. விவசாய பிரச்சனைகள் குறித்து பேசுவோர் சிறு விவசாயிகளை மறந்து விடுகின்றனர். விவசாயிகள் போராட்டம் எதனால் நடக்கிறது என விரிவான விவாதம் செய்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். விவசாயிகளுக்கு வேளாண் பொருட்களை விற்பனை செய்வதற்கு சுதந்திரம் தேவை என்றும் வேளாண் சட்டங்களின் திருத்தம் தேவை என அன்றைய பிரதமர் மன்மோகன் சிங் பேசியதை நாங்கள் செய்திருக்கிறோம். வேளாண் விளை பொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை தொடரும். போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான மத்திய அரசின் கதவுகள் திறந்தே உள்ளன என்றார்.

இந்நிலையில், வேளாண் சட்டம் குறித்து மாநிலங்களவையில், பிரதமர் நரேந்திர மோடி பேசிய நிலையில், டெல்லியில் செய்தியாளர்களிடம் பேட்டியளித்த பாரதிய கிசான் யூனியன் தலைவர் ராகேஷ் திகாயித், (எம்எஸ்பி) குறைந்தபட்ச ஆதரவு விலை முடிவுக்கு வருகிறது என்று நாங்கள் எப்போது சொன்னோம்? குறைந்தபட்ச ஆதரவு விலை தொடர்பாக ஒரு சட்டம் உருவாக்கப்பட வேண்டும் என்றுதான் நாங்கள் கூறினோம். அத்தகைய சட்டம் அமைக்கப்பட்டால், நாட்டின் அனைத்து விவசாயிகளும் பயனடைவார்கள். இப்போது, குறைந்தபட்ச ஆதரவு விலையை உறுதி செய்வதற்காக எந்த சட்டமும் இல்லை. எனவே தான் விவசாயிகளிடமிருந்து வியாபாரிகள் கொள்ளையடிக்கின்றனர் என்றார்.

Related Stories: