2 ஆண்டுக்கு பிறகு போக்குவரத்துக்கு பச்சைக்கொடி!: உதகை கல்லட்டி மலைப்பாதையில் பயணிக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி..!!

நீலகிரி: உதகை அருகே கல்லட்டி மலைப்பாதையில் பயணிக்க வெளிமாவட்ட மற்றும் வெளிமாநில வாகனங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 36 கொண்டை ஊசி வளைவுகள் கொண்ட இந்த மலைப்பாதை மிகவும் செங்குத்தாக தலகுண்டா முதல் சீக்கூறு வரை அமைந்துள்ளது. சுமார் 13 கிலோ மீட்டர் தூரம் அமைந்துள்ள சாலையில் வாகனங்களை ஓட்ட மிகுந்த அனுபவங்கள் தேவை. உதகையில் இருந்து குறைந்த நேரத்தில் மசினகுடி, முதுமலை, கேரளா மற்றும் கர்நாடகாவிற்கு செல்ல முடியும் என்பதால் ஏராளமானோர் இந்த சாலையை பயன்படுத்தி வந்தனர்.

இந்நிலையில் கடந்த 2018ம் ஆண்டு எதிர்பாராத விதமாக கார் ஒன்று பள்ளத்தில் கவிழ்ந்து 5 பேர் பலியாகினர். இதையடுத்து வெளிமாநில மற்றும் வெளிமாவட்ட வன போக்குவரத்திற்கு மாவட்ட நிர்வாகம் தடை விதித்தது. மக்களின் தொடர் கோரிக்கையை அடுத்து கல்லட்டி மலைப்பாதையில் வெளிமாவட்ட மற்றும் வெளிமாநில வாகனங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. வாகன போக்குவரத்து அனுமதிக்கப்பட்டதற்கு சுற்றுலா வாகன ஓட்டுனர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

முதற்கட்டமாக இலகுரக வாகனங்கள் மட்டும் கல்லட்டி மலைப்பாதையில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 2 ஆண்டுகளுக்கு பிறகு வாகன போக்குவரத்திற்கு பச்சை கொடி காட்டப்பட்டுள்ளதால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இந்த மலைப்பாதை திறக்கப்பட்டுள்ளதால் பல கிலோ மீட்டர் தூரம் சுற்றி பயணிக்க தேவையில்லை. இதனால் குறுகிய நேரத்தில் தங்களுடைய இடத்திற்கு செல்லலாம் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Related Stories: