பன்றிப்பண்ணைக்கு கோழி கழிவு கொண்டு சென்ற 2 மினி டெம்போக்கள் சிறை பிடிப்பு-செண்பகராமன்புதூரில் பரபரப்பு

ஆரல்வாய்மொழி : செண்பகராமன்புதூர் பகுதியில் உள்ள பன்றி பண்ணைக்கு கோழி கழிவுகளை  கொண்டு சென்ற 2 மினி டெம்போக்களை பொதுமக்கள் சிறை பிடித்தனர்.  செண்பகராமன்புதூர் தோவாளை சானல் அருகே செண்பகராமன்புதூர் - தோவாளை இணைப்பு  சாலை செல்கிறது. இச்சாலையின் வழியாக சென்றால் வில்லிசேரிகுளத்திற்கு  செல்லலாம்.

இக்குளத்தின் அருகே நாகர்கோவில் பகுதியை சேர்ந்த ஒருவருக்கு  சொந்தமாக பன்றி பண்ணை மற்றும் ஆடு, கோழி, மாட்டு பண்ணையும் உள்ளது. இதில்  பன்றிப்பண்ணையில் 500 க்கும் மேற்பட்ட பன்றிகள் வளர்க்கப்பட்டு வருகிறது.  இந்த பன்றிப்பண்ணைக்கு நாகர்கோவில் மற்றும் சுற்றுவட்டார  பகுதிகளில் இருந்து கோழி கழிவுகள் மற்றும் மாமிசக் கழிவுகளை கொண்டு வந்து  கொட்டுகிறார்கள்.

இதனால் செண்பகராமன்புதூர் ஊராட்சிக்குட்பட்ட இலந்தைநகர்  இல்லத்தார்தெரு, யாதவர்தெரு போன்ற பகுதிகளில் துர்நாற்றம் வீசுவதாக பொதுமக்கள் கூறுகிறார்கள். இந்நிலையில் நேற்று மாலை  அம்பாசமுத்திரம் பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணன் மகன் தளவாய் (28), ஆலங்குளம் பகுதியை சேர்ந்த பொன்னுசாமி மகன் அருண் (49) ஆகியோர் இரண்டு மினி டெம்போவில் கோழி கழிவுகளை ஏற்றிக்கொண்டு  செண்பகராமன்புதூர் வழியாக வந்து தோவாளை சானல் ரோட்டில்  செல்வதாக அப்பகுதி பொது மக்களுக்கு தகவல் கிடைத்தது.

இதனையடுத்து  செண்பகராமன்புதூர்  ஆற்றுப்பாலம் அருகே பொதுமக்கள் குவிந்தனர். மேலும் செண்பகராமன்புதூர் ஊராட்சி மன்ற தலைவர் கல்யாணசுந்தரம்,  துணைத்தலைவர் தேவதாஸ் ஆகியோரும் சம்பவ இடத்திற்கு வந்தனர்.இதனிடையே  பன்றி பண்ணையில் கழிவுகளை கொட்டி விட்டு  இரண்டு மினி டெம்போக்கள் அங்கு வந்தன. அவற்றை  பொதுமக்கள் சிறைபிடித்தனர்.

இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.  இதுபற்றி தகவல் அறிந்த ஆரல்வாய்மொழி போலீசார் சம்பவ இடம் விரைந்தனர்.  பன்றிப்பண்ணையினை சேர்ந்த ஸ்டீபன்( 49) என்பவரும் அங்கு வந்தார்.  அப்போது பொதுமக்களுக்கும் ஸ்டீபனுக்கும் இடையே வாக்குவாதம்  ஏற்பட்டது.  போலீசார் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தைநடத்தினர்.

அப்போது பொதுமக்கள்,  எங்கள் பகுதியில் மாமிச, கோழி  கழிவுகளை கொண்டு வந்து கொட்டுவதால் சுகாதாரக் கேடு ஏற்பட்டுள்ளது. இதனால் காற்று மாசுபட்டு நோய்  பரவும் அபாயம் ஏற்படுகிறது. எனவே கோழி கழிவுகளையும் மாமிச  கழிவுகளையும் இப்பகுதிக்கு கொண்டுவரக் கூடாது. அவ்வாறு கொண்டு  வந்தால் பன்றிப்பண்ணைக்கான அனுமதியை ரத்து செய்ய வேண்டும் என்றனர்.

அப்போது, சுகாதாரக்கேடு  ஏற்படும் விதத்தில் கோழிக்கழிவுகளையும், மாமிச கழிவுகளையும் கொண்டு  வருவதில்லை என ஸ்டீபன் தெரிவித்தார். இதனையடுத்து  சுமார் ஒரு மணி நேரத்திற்கு பிறகு மினி டெம்போக்கள் விடுவிக்கப்பட்டன.

Related Stories: